என்னை போல அவரையும் தாமதம் பண்ணாதீங்க – ப்ராட்மேனை மிஞ்சி சாதித்த இளம் வீரருக்காக சூரியகுமார் கோரிக்கை

Suryakumar-Yadav
- Advertisement -

இந்தியாவின் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான இரானி கோப்பை அக்டோபர் 1ஆம் தேதியன்று ராஜ்கோட் நகரில் துவங்கியது. சௌராஷ்டிரா மற்றும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகள் மோதும் அந்த போட்டியில் டாஸ் வென்ற ரெஸ்ட் ஆஃப் இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய சௌராஷ்டிரா ஆரம்பம் முதலே அதிரடியான பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வெறும் 98 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக தர்மேந்திர சிங் ஜடேஜா 28 ரன்கள் எடுக்க ரெஸ்ட் ஆஃப் இந்தியா சார்பில் பந்துவீச்சில் முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சில் விளையாடிய ரெஸ்ட் ஆஃப் இந்தியா 374 ரன்கள் குவித்து அசத்தியது.

அபிமன்யு ஈஸ்வரன் 0, மயங்க் அகர்வால் 11, யாஷ் துல் 5 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட்டானதால் 18/3 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற அணிக்கு 4வது விக்கெட்டுக்கு நங்கூரமாக நின்று 220 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து தூக்கி நிறுத்திய ஹனுமா விஹாரி 82 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அவரை விட அட்டகாசமாக பேட்டிங் செய்த மும்பை வீரர் சர்ப்ராஸ் கான் 20 பவுண்டரி 2 சிக்சருடன் சதமடித்து 138 (178) ரன்களை விளாசி தனது அணியை காப்பாற்றினார். அவருடன் சௌரப் குமார் 55 ரன்கள் எடுக்க சௌராஷ்டிரா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக சேட்டன் சக்காரியா 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

ப்ராட்மேனுக்கு மிஞ்சி:
அதை தொடர்ந்து சௌராஷ்டிரா தனது 2வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வரும் நிலையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்காக சதமடித்த இளம் வீரர் சர்ப்ராஸ் கான் மீண்டும் ஒரு முறை தேர்வுக்குழுவின் கதவை பலமாக தட்டியுள்ளார். இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற லட்சியத்துடன் கடந்த சில வருடங்களாகவே ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் தொடரில் எதிரணிகளை வெளுத்து வாங்கும் அவர் இதுவரை களமிறங்கிய 43 இன்னிங்சில் 10 சதங்கள் 8 அரை சதங்கள் உட்பட 2892 ரன்களை 82.63 என்ற அபாரமான சராசரியில் குவித்து வருகிறார்.

அதிலும் இந்த வருடம் ரஞ்சி கோப்பை பைனலில் 134, துலீப் கோப்பை பைனலில் 127 என 2 பெரிய போட்டிகளில் சதமடித்து கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் ரஞ்சி கோப்பை பைனலில் சதமடித்த போது “இந்தியாவுக்காக விளையாட இன்னும் நான் என்னதான் செய்யவேண்டும்” என்ற வகையில் கலங்கிய கண்களுடன் கொண்டாடியதை யாரும் மறக்க முடியாது. குறிப்பாக உலக அளவில் முதல்தர கிரிக்கெட்டில் குறைந்தபட்சம் 2000 ரன்களை எடுத்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக 2வது சராசரியை கொண்டுள்ள சர்பராஸ் கான் தற்போது உச்சகட்ட பார்மில் இருக்கிறார். அந்த பட்டியல்:
1. டான் ப்ராட்மேன் : 95.14
2. சர்பராஸ் கான் : 81.49*
3. விஜய் மெர்சன்ட் : 71.64

- Advertisement -

அதைவிட முதல்தர கிரிக்கெட்டில் 43 இன்னிங்ஸ்களுக்குப் பின் ஜாம்பவான் டான் பிராட்மேனை விட அவர் 1 ரன் அதிகமாக எடுத்துள்ளார். டான் பிராட்மன் 22 போட்டிகளில் 43 இன்னிங்சில் 2927 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சர்பராஸ் கான் 29 போட்டிகளில் அதே 43 இன்னிங்சில் 2928* ரன்களை எடுத்துள்ளார். இப்படி பிராட்மேனுக்கு நிகராக சாதனைகளை படைத்து வரும் இவரது திறமையை வீணடிக்காமல் இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நட்சத்திர இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் மறைமுகமாக கோரிக்கை வைத்துள்ளார்.

சூர்யாவின் கோரிக்கை:
அவரைப் போலவே இந்தியாவுக்காக விளையாடும் லட்சியத்தில் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் கடினமாக போராடிய சூரியகுமாரை தேர்வுக்குழு தொடர்ச்சியாக புறக்கணித்து வந்தது. அதனாலேயே 20+ வயதில் அறிமுகமாகும் வீரர்களுக்கு மத்தியில் கடும் போராட்டத்திற்குப் பின் 30 வயதில் இந்தியாவுக்காக அறிமுகமான சூரியகுமார் கடந்த ஒன்றரை வருடங்களாக எந்தளவுக்கு அசத்தலாக செயல்படுகிறார் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இதையும் படிங்க: “சென்னை சேப்பாக்கத்தில் ரசிகர்களின் மத்தியில் நான்” தனது ஆசையை பகிர்ந்த – ருதுராஜ் கெய்க்வாட்

அந்த நிலையில் சர்பராஸ் கான் சதமடிக்கும் தருணத்தை தொலைக்காட்சியில் செல்பியாக எடுத்து “உங்களால் மிகவும் பெருமையடைகிறேன்” என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். சாதாரணமாக பாராட்ட வேண்டுமெனில் வாழ்த்துச் செய்தி மற்றும் புகைப்படத்துடன் பதிவிட்டாலே போதும் என்ற நிலைமையில் தம்மை போல் சர்ப்ராஸ் கான் திறமையை தாமதமாக பயன்படுத்த வேண்டாம் என்று தேர்வுக்குழுவுக்கு உணர்த்துவதற்காகவே சூரியகுமார் அவருடன் செல்பி எடுத்து இப்படி பதிவிட்டுள்ளதாக ரசிகர்கள் அந்த பதிவின் பின்னணியை உடைக்கிறார்கள்.

Advertisement