
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சர்ஃபராஸ் கான் கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய அணியின் வாய்ப்புக்காக காத்திருந்து கடைசியாக கடந்த ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். அப்படி அறிமுகமாக விளையாடிய அவர் இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி 1 சதம் மற்றும் மூன்று அரைசதம் என 37.1 ரன்கள் சராசரியுடன் 371 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.
ஆனாலும் அவருக்கு டெஸ்ட் போட்டிகளில் இதுவரை நிரந்தர வாய்ப்பு கிடைக்கவில்லை. இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் நிச்சயம் மிடில் ஆர்டரில் சர்ஃபராஸ் கான் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் வெளிநாட்டு மண்ணில் நடைபெறயிருந்த இந்த தொடருக்காக சர்ஃபராஸ் கான் புறக்கணிக்கப்பட்டார்.
அவருக்கு பதிலாக கருண் நாயர் மற்றும் சாய் சுதர்சனுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்திருந்தது. ஆனால் அவர்கள் இருவருமே இந்த இங்கிலாந்து தொடரில் மோசமான செயல்பாட்டையே வெளிப்படுத்தி இருந்தனர். அதனால் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணியில் சர்பராஸ் கான் இடம் பெற்றிருக்க வேண்டும் என்ற விவாதங்களும் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்காத வேளையில் மீண்டும் இந்திய டெஸ்ட் அணிக்கான கதவுகளை உடைக்கும் வகையில் தான் புஜ்ஜி பாபு தொடரில் விளையாட இருப்பதாக ஏற்கனவே சர்ஃபராஸ் கான் தெரிவித்து இருந்தார்.
கடினமான இந்த தொடரில் ரன் குவிக்க மிக கஷ்டம் என்று பலரும் பேசி வரும் வேளையில் அந்த தொடரின் முதல் போட்டியிலேயே தமிழக கிரிக்கெட் வாரிய பிளேயிங் லெவன் அணிக்கு எதிராக சதம் அடித்து அசத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக இந்த போட்டியின் போது 92 பந்துகளில் சதம் அடித்த அவர் 114 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் என 138 ரன்கள் எடுத்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க : இந்திய அணிக்கு நான் மீண்டும் கம்பேக் கொடுக்க அந்த 2 பேர் தான் காரணம் – வருண் சக்கரவர்த்தி பேட்டி
இதன்மூலம் தன்னை தேர்வு செய்யாத தேர்வுக்குழுவினருக்கு மீண்டும் ஒருமுறை சர்பராஸ் கான் தனது பேட்டின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். அவரது இந்த தொடர்ச்சியான சிறப்பான செயல்பாடு காரணமாக எதிர்வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் மீண்டும் இந்திய அணியில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.