நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் வெறும் 46 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய நியூசிலாந்து அணியானது 402 ரன்கள் குவித்தது.
சாதனை நிகழ்த்திய சர்பராஸ் கான் :
இதன் காரணமாக முதல் இன்னிங்ஸ்லேயே இந்திய அணி 356 ரன்கள் பின்னிலையை சந்தித்தது. அதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வரும் இந்திய அணி எப்படியாவது இந்த இன்னலை சமாளித்து வெளியே வர வேண்டும் என்று முழு முயற்சியுடன் போராடி வருகிறது.
அந்த வகையில் தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணியானது 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நிலையில் 300 ரன்கள் கிட்டத்தட்ட கடந்து விட்டது. இன்னும் 200 முதல் 250 ரன்கள் வரை அடித்தால் நிச்சயம் இந்திய அணிக்கான வெற்றி வாய்ப்பும் உள்ளது என்பதால் போட்டி தற்போது சுவாரஸ்யமாகியுள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி சார்பாக ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் அரைசதம் கடந்த வேளையில் நான்காவது இடத்தில் களமிறங்கி விளையாடி வரும் சர்பராஸ் கான் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்து அசத்தியுள்ளார்.
அதிலும் குறிப்பாக நியூசிலாந்து அணிக்கு எதிராக ஷிகர் தவானுக்கு அடுத்து இரண்டாவது வீரராக ஒரு தனித்துமான சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். அந்த சாதனை யாதெனில் : இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டான அவர் இரண்டாவது இன்னிங்ஸின்போது சதம் அடித்துள்ளார். இப்படி ஒரு அணிக்கு எதிராக ஒரே போட்டியில் டக் அவுட்டாகி அதன் பின்னர் அதே போட்டியில் சதம் அடித்த 22-வது இந்திய வீரராக இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க : சிக்ஸரில் செஞ்சுரி.. சோதனையிலும் இந்தியா 147 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் யாரும் செய்யாத உலக சாதனை
நியூசிலாந்து அணிக்கு எதிராக கடந்த 2014-ஆம் ஆண்டு ஷிகர் தவான் இதேபோன்று ஒரு இன்னிங்சில் டக்கும், அடுத்த இன்னிங்சில் சதமும் அடித்த வேளையில் தற்போது இரண்டாவது இந்திய வீரராக சர்பராஸ் கான் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு இன்னிங்சில் டக்கும், ஒரு இன்னிங்ஸில் சதமும் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடைசியாக போன மாதம் சென்னை மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சுப்மன் கில்லும் இதேபோன்று ஒரு இன்னிங்சில் டக்கும், ஒரு இன்னிங்சில் சதமும் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



