இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. அப்போட்டியில் டாஸ் வென்று தப்பு கணக்கு போட்டு முதலில் பேட்டிங் செய்த இந்தியா 46க்கு ஆல் அவுட்டானது. அதனால் சொந்த மண்ணில் குறைந்தபட்ச டெஸ்ட் ஸ்கோரை பதிவு செய்த இந்தியா வரலாறு காணாத மோசமான சாதனை படைத்தது.
அதிகபட்சமாக ரிசப் பண்ட் 20 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மாட் ஹென்றி 5 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் பேட்டிங் செய்த நியூசிலாந்து அபாரமாக விளையாடி 402 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டேவோன் கான்வே 91, ரச்சின் ரவீந்திரா 134 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சோதனையிலும் சாதனை:
அதன் பின் விளையாடும் இந்தியா மூன்றாவது நாள் முடிவில் 231-3 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 35, கேப்டன் ரோகித் சர்மா 52, விராட் கோலி 70 ரன்கள் எடுத்து போராடி அவுட்டானார்கள். களத்தில் சர்பராஸ் கான் 70* ரன்களுடன் போராடும் நிலையில் 7 விக்கெட் கைவசம் வைத்துள்ள இந்தியா இன்னும் 125 ரன்கள் பின்தங்கியுள்ளது.
அதனால் இந்தப் போட்டியில் இந்தியா தோல்வியை சந்திக்குமா அல்லது போராடி டிரா செய்யுமா அல்லது அசாத்தியமான வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. முன்னதாக ரோஹித் சர்மா தலைமையில் அதிரடியாக விளையாடும் அணுகுமுறையை இந்தியா பின்பற்றி வருகிறது. அதைப் பின்பற்றி இந்தியா இப்போட்டியில் இதுவரை அடித்த 5 சிக்ஸர்களையும் சேர்த்து இந்த 2024 வருடத்தில் மட்டும் 102* சிக்ஸர்கள் அடித்துள்ளது.
உலக சாதனை:
குறிப்பாக ஜெய்ஸ்வால் மட்டும் அதிகபட்சமாக இந்த வருடம் 29* சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக 147 வருட டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் 100 சிக்சர்களுக்கு மேல் அடித்த முதல் அணி அற்புதமான உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது. அந்தப் பட்டியல் (சிக்ஸர்கள்):
1. இந்தியா: 102* (2024இல்)
2. இங்கிலாந்து: 89 (2022இல்)
3. இந்தியா: 87 (2021இல்)
4. நியூசிலாந்து: 81 (2014இல்)
5. நியூசிலாந்து: 71 (2013இல்)
இதையும் படிங்க: அதை பாத்துட்டோம்.. அதே மாதிரி சர்பராஸ் இதை செஞ்சா.. இந்தியாவை ஜெயிக்க வைக்க முடியும்.. குல்தீப் பேட்டி
அந்த வகையில் சோதனையிலும் இந்தியா இந்த உலக சாதனை படைத்துள்ளது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக அமைகிறது. மேலும் இதற்கு முன் 36க்கு ஆல் அவுட்டான பின்பும் ஆஸ்திரேலியாவில் தொடரை வென்று இந்தியா சாதனை படைத்தது. சமீபத்தில் கான்பூரில் மழையால் பாதிக்கப்பட்ட டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்தை அடித்து நொறுக்கி இந்தியா வென்றது. அதே போல இந்தப் போட்டியிலும் இந்தியா போராடி வெல்லும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.



