இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் போது இந்திய அணிக்காக அறிமுகமான சர்பராஸ் கான் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் மூன்று அரைசதம் என 371 ரன்கள் குவித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்திய அணியின் எதிர்கால நட்சத்திர வீரராக பார்க்கப்படும் இவருக்கு தொடர்ச்சியாக டெஸ்ட் வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சர்பராஸ் கானுக்கு கடைசி போட்டியிலும் வாய்ப்பு கிடைக்காது :
ஆனால் அவருக்கு தொடர்ச்சியான ஏமாற்றங்களே கிடைத்து வருகின்றன. இந்திய டெஸ்ட் அணியில் தொடர்ந்து அவர் இடம் பிடித்து வந்தாலும் பிளேயிங் லெவனில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருவது நிச்சயம் அவருக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கலாம். அந்த வகையில் ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியிலும் அவருக்கு கிடைத்திருந்தது.
ஆனாலும் அவருக்கு முதல் நான்கு போட்டிகளின் முடிவில் ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் சிட்னி நகரில் நடைபெற இருக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலாவது அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் நிச்சயம் அவருக்கு அந்த கடைசி போட்டிக்கான அணியிலும் வாய்ப்பு கிடைக்காது என்று தெரிகிறது.
ஏனெனில் இந்த ஆஸ்திரேலிய தொடரில் சுப்மன் கில் போன்ற எதிர்கால கேப்டனாக பார்க்கப்படும் வீரரே பென்ச் செய்யப்படும் போது வாய்ப்புக்காக காத்திருக்கும் சர்பராஸ் கானுக்கு நிச்சயம் ப்ளேயிங் லெவனில் இடம் கிடைக்காது என்று தெரிகிறது. ஏனெனில் டாப் ஆர்டரில் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால், கே.எல் ராகுல் ஆகியோரும் மிடில் ஆர்டரில் விராட் கோலி, ரிஷப் பண்ட், நிதீஷ் ரெட்டி போன்ற எந்தவொரு வீரரையும் அவ்வளவு எளிதாக நீக்க முடியாது.
ஒருவேளை அவர்களில் ஒருவருக்கு ஓய்வு அளிக்க விரும்பினால் மட்டுமே சர்பராஸ் கானுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் கம்பீர் அதனை விரும்ப மாட்டார். எனவே அவருக்கு ஐந்தாவது போட்டியிலும் வாய்ப்பு கிடைக்காது என்று தெரிகிறது. ஆனாலும் உயரம் சற்று குறைந்த சர்பராஸ் கான் ஸ்பின்னர்களை நேர்த்தியாக எதிர்கொள்ள கூடியவர் என்பதை நியூசிலாந்து அணிக்கு எதிரான இன்னிங்ஸ்லேயே நாம் பார்த்துள்ளோம்.
இதையும் படிங்க : சிட்னி டெஸ்டில் இருந்து ரிஷப் பண்ட் நீக்கப்பட்டு துருவ் ஜூரேல் விளையாட வாய்ப்பு – காரணம் என்ன தெரியுமா?
நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் போட்டியில் அவர் 195 பந்துகளை எதிர்கொண்டு 150 ரன்கள் எடுத்து அசத்தியிருந்தார். சுழற்பந்து வீச்சாளர்களையும், வேகப்பந்து வீச்சாளர்களையும் நேர்த்தியாக எதிர்கொள்ளும் அவர் அடுத்த இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியிலும் இருப்பார் என்பதனால் அவரின் திறமையை சோதிக்க சிட்னி டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும் என்பதே பலரது வேண்டுகோளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.



