
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் பாகிஸ்தானில் கோலாகலமாகத் துவங்கி நடைபெற உள்ளது. அதில் பாகிஸ்தான் தங்களுடைய சொந்த மண்ணில் நடப்பு சாம்பியனாக களமிறங்குகிறது. மறுபுறம் இந்திய அணி தங்களுடையப் போட்டிகளை துபாய் மண்ணில் விளையாடுகிறது. அவ்விரு அணிகளும் வரும் பிப்ரவரி 23ஆம் தேதி துபாயில் சந்திக்க உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக ஐசிசி தொடர்களில் பெரும்பாலான போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி கண்டுள்ளது. அதனால் இம்முறையும் எப்படியாவது இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்பதே அந்நாட்டவர்களின் முதன்மை இலக்காக இருக்கிறது. இந்நிலையில் இந்திய அணியை சாதாரண அணியாக நினைத்துக் கொண்டு விளையாடினாலே 2017 ஃபைனல் போல வெற்றி பெறலாம் என்று முன்னாள் கேப்டன் சர்பராஸ் அஹ்மத் பாகிஸ்தான் அணிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
எனவே இந்தியாவை சாதாரண அணியாக எடுத்துக்கொண்டு அழுத்தமின்றி விளையாடினால் வெற்றி பெற்று சாம்பியன்ஸ் கோப்பையை தக்க வைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி சர்பராஸ் ஐசிசி இணையத்தில் பேசியது பின்வருமாறு. ” இந்தியாவுக்கு எதிராக நாங்கள் விளையாடும் போதெல்லாம் அது ஸ்பெஷல் போட்டியாக இருக்கிறது”
“ஏனெனில் அதைச் சுற்றி நிறைய எதிர்பார்ப்புகளும் அழுத்தமும் உருவாகின்றன. ஆனால் வீரர்களாக நீங்கள் மிகவும் அமைதியாக இருந்து, சத்தங்களை தடுத்து, ஆஸ்திரேலியா அல்லது மற்ற ஏதேனும் அணிக்கு எதிராக விளையாடுவது போல் சாதாரணமாக விளையாட வேண்டும். இம்முறை பாகிஸ்தான் சாம்பியன் பட்டத்தை தக்க வைப்பதற்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன்”
“அவர்களிடம் வலுவான அணி இருக்கிறது. 2017 தொடரில் விளையாடிய சில வீரர்கள் இப்போதும் விளையாடுகிறார்கள். குறிப்பாக பாபர் அசாம் பற்றி நாம் பேசுகிறோம். 2017 விட தற்போது அவர் முதிர்ச்சியைக் கொண்ட டாமினேட் செய்யக்கூடிய வீரராக உருவெடுத்துள்ளார். பாகிஸ்தான் அணிக்கு அவரைப் போலவே ஃபகார் ஜாமான் போன்ற வீரர்களின் பேட்டிங்கும் முக்கியமாகும்”
இதையும் படிங்க: ஜோ ரூட்டை தவிர வேற எந்த இங்கிலாந்து வீரருக்கும் அதை சொல்லும் தகுதி இல்ல – கெவின் பீட்டர்சன் காட்டம்
“அதே போல பந்து வீச்சுத் துறையில் சாஹின் அப்ரிடி, ஹரிஷ் ரவூப் புத்திசாலித்தனமாக நன்றாக விளையாடி வருகிறார்கள். கேப்டன் முகமது ரிஸ்வான் தற்போது விக்கெட் கீப்பராக இருக்கிறார். நான் 2017 தொடரில் விக்கெட் கீப்பராக விளையாடினான் வெற்றிகரமாக செயல்பட்டேன்” என்று கூறினார். மறுபுறம் 2017 தோல்விக்கு பதிலடி கொடுத்து இம்முறை பாகிஸ்தானை வீழ்த்தி 2013க்குப்பின் கோப்பையை வெல்ல இந்தியா தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.