இந்தியாவில் விஜய் ஹசாரே கோப்பை 2025/26 உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. அந்தத் தொடரில் டிசம்பர் 31ஆம் தேதி ஜெய்ப்பூரில் எலைட் குரூப் சி பிரிவில் இடம் வகிக்கும் மும்பை மற்றும் கோவா அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற கோவா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து ஆட்டத்தை துவங்கிய மும்பைக்கு அங்கிரிஸ் ரகுவன்சி 11 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த முஷீர் கான் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்புறம் மெதுவாக விளையாடிய ஜெய்ஸ்வால் அரை சதத்தை நழுவ விட்டு 46 (64) ரன்னில் பெவிலியன் திரும்பினார். ஆனால் அடுத்து வந்த சர்பராஸ் கான் மிகவும் அதிரடியாக பேட்டிங் செய்து கோவா பவுலர்களை வெளுத்து வாங்கி வெறும் 23 பந்தில் அரை சதமடித்தார்.
75 பந்தில் 157 ரன்ஸ்:
தன்னுடைய அண்ணனான அவருடன் சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய முசீர் கான் அரை சதமடித்து 60 (66) ரன்கள் குவித்து அவுட்டானார். அடுத்து வந்த சித்தேஷ் லெட் 17, கேப்டன் சர்துள் தாக்கூர் சரவெடியாக 27(8) ரன்கள் விளாசி அவுட்டானார்கள். இந்தப்பக்கம் தொடர்ந்து வெளுத்து வாங்கிய சர்பராஸ் கான் 56 பந்தில் சதமடித்து மும்பை 300 ரன்கள் தாண்ட வைத்தார்.
தொடர்ந்து டி20 போல அதிரடியாக விளையாடிய அவர் 9 பவுண்டரி 14 சிக்ஸர்களை பறக்க விட்டு 157 (75) ரன்களை 209.33 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி அவுட்டானார். லோயர் ஆர்டரில் அதிரடி காட்டிய ஹர்திக் தாமோர் 53 (28), சம்ஸ் முலானி 22 (15), டானுஷ் கோட்டின் 23* (12), துஷார் தேஷ்பாண்டே 7* (3) ரன்களை குவித்தனர். அதனால் 50 ஓவரில் மும்பை 444/8 ரன்களை குவித்து மிரட்டியது.
சிஎஸ்கே ஹேப்பி:
கோவாவுக்கு அதிகபட்சமாக தர்ஷன் மிஷால் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அந்த வகையில் இப்போட்டியில் மும்பை 444 ரன்கள் குவிக்க உதவிய சர்பராஸ் கான் சமீபத்திய சயீத் முஸ்டாக் அலி கோப்பையிலும் அதிரடியாக விளையாடினார். அதனால் 2026 ஐபிஎல் ஏலத்தில் முதல் சுற்றில் எந்த அணியும் வாங்காத அவரை சிஎஸ்கே நம்பி வாங்கியுள்ளது.
இதையும் படிங்க: இந்திய அணி அந்த வாய்ப்பைக் கொடுத்தாலும் இல்லனாலும்.. உழைப்பு கூட்டிகிட்டு போகும்.. ஜுரேல் பேட்டி
அப்படி தம்மை நம்பி வாங்கிய சிஎஸ்கே அணி மகிழ்ச்சியடையும் அளவுக்கு சர்பராஸ் கான் தொடர்ந்து உள்ளூரில் அதிரடியாக விளையாடி வருகிறார். அத்துடன் விரைவில் 2026 புத்தாண்டில் நடைபெறும் நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்படவுள்ளது. அதற்கான போட்டியில் தாமும் உள்ளூரில் சிறப்பாக விளையாடி தயாராக இருக்கிறேன் என்பதை அவர் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கருக்கு காண்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



