இந்திய கிரிக்கெட் அணி 2026 புத்தாண்டில் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடரில் விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல பேக்-அப் கீப்பராக தேர்வாக இஷான் கிசான், ரிஷப் பண்ட், துருவ் ஜுரேல் ஆகியோருடைய போட்டி காணப்படுகிறது.
அதில் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் கிடைத்த வாய்ப்புகளில் ஜுரேல் ஓரளவு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதனால் 2025இல் இந்தியா விளையாடிய 2 ஒருநாள் தொடர்களில் அவரும் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இருப்பினும் தற்போது உள்ளூர் கிரிக்கெட்டில் அதிரடியாக பெரிய ரன்கள் குறித்து தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் இசான் கிசான் அவருக்கு போட்டியாக வந்துள்ளார்.
இந்திய அணி வாய்ப்பு:
அதனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது. அதே சமயம் 2025 விஜய் ஹசாரே கோப்பையில் துருவ் ஜுரேல் சிறப்பாக விளையாடி 3 போட்டிகளில் 307 ரன்களை 153.50 சராசரியில் குவித்து அசத்தி வருகிறார். குறிப்பாக பரோடாவுக்கு எதிரான போட்டியில் தனது முதல் லிஸ்ட் ஏ அடித்த அவர் 160 (101) ரன்களை குவித்து அசத்தினார்.
அதனால் இந்திய அணியில் தேர்வாக அவருக்கும் கணிசமான வாய்ப்புகள் இருக்கிறது என்றே சொல்லலாம். இந்நிலையில் நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் தமக்கு வாய்ப்பு கிடைத்தாலும் இல்லாவிட்டாலும் அதற்காக வருத்தப்படாமல் தொடர்ந்து உள்ளூரில் அசத்துவேன் என்று ஜுரேல் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் தம்முடைய உழைப்பு வீணாகாது என்று அவர் கூறியுள்ளார்.
ஜுரேல் நம்பிக்கை:
எனவே விரைவில் தமக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையை வெளிப்படுத்தும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “எனக்கு நானே அதிகப்படியான இலக்குகளை நிர்ணைக்கவில்லை. என்னுடைய செயல்முறைகளில் நான் கவனம் செலுத்துகிறேன். விஜய் ஹசாரே கோப்பைக்கு முன்பாகவும் நேரம் கிடைத்த போதெல்லாம் நான் 4 – 5 மணி நேரங்கள் பயிற்சிகளை செய்தேன்”
இதையும் படிங்க: 2025ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இந்திய அணி பெற்ற.. மகத்தான மறக்க முடியாத 5 வரலாற்று வெற்றிகள்
“அப்போது வாய்ப்பு கிடைக்கும் போது என்ன செய்யலாம் என்ற திட்டங்களை என்னுடைய மனதில் உருவாக்கினேன். எனவே இந்திய அணிக்காக தேர்வு எப்படி இருந்தாலும் என்னுடைய உழைப்பை யாரும் என்னிடமிருந்து எடுக்க முடியாது. அதனாலேயே நான் தொடர்ந்து கடினமாக உழைத்து வருகிறேன். என்னுடைய உழைப்பு தான் இதுவரை என்னை இங்கே அழைத்து வந்துள்ளது. அதுவே என்னை முன்னோக்கி எடுத்துச் செல்லும்” என்று கூறினார்.



