ராஜ்கோட் நகரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் மூன்றாவது போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி துவங்கியது. அந்த போட்டியில் ஒரு வழியாக இளம் வீரர் சர்பராஸ் கான் அறிமுகமானது பல ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. கடந்த சில வருடங்களாகவே ரஞ்சிக் கோப்பையில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த அவருக்கு சீனியர்கள் இருந்ததால் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இருப்பினும் தற்போது சில முக்கிய வீரர்கள் காயத்தை சந்தித்து வெளியேறியதால் நீண்ட போராட்டத்திற்கு பின் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு பெற்றுள்ள அவருக்கு அறிமுகத் தொப்பியை ஜாம்பவான் அனில் கும்ப்ளே கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது களத்தில் இருந்த சர்பராஸ் கான் தந்தை மற்றும் மனைவி ஆகியோர் ஆனந்தத்தில் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் கண் கலங்கினர்.
ரோஹித்தின் பதில்:
குறிப்பாக இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதற்காக கடந்த பல வருடங்களாக கொடுத்த ஆதரவையும் வசதிகளையும் தன்னுடைய மகன் வீணடிக்கவில்லை என்பதை நினைத்து சர்ப்ராஸ் கான் தந்தை நவ்சத் கான் கண்ணீர் விட்டு அழுதார். அவரிடம் சென்ற சர்பராஸ் கான் தன்னுடைய அறிமுகத் தொப்பியை காட்டினார். அதை தன்னுடைய கையில் வாங்கிய நவ்சத் கான் முத்தமிட்டு பொக்கிஷமாக பார்த்தது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது.
அந்த நிலைமையில் அவரிடம் சென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா “நீங்கள் சர்ப்ராஸ் கானுக்காக என்ன செய்தீர்கள் என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம்” என்று கை கொடுத்து பாராட்டினார். அப்போது “சார் சர்பராஸ் கானை தயவு செய்து கவனித்துக் கொள்ளுங்கள்” என்று அவருடைய தந்தை நவ்சத் தான் ரோகித் சர்மாவின் கைகளைப் பிடித்து கோரிக்கை வைத்தார். அதற்கு “அரே சார். கண்டிப்பாக கண்டிப்பா” என்று பதிலளித்த ரோஹித் சர்மா அவரிடம் வாக்குறுதி கொடுத்தார்.
அப்படி பல நெகிழ்ச்சியான தருணங்களுக்கு மத்தியில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த சர்பராஸ் கான் ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடி 48 பந்துகளில் 50 ரன்கள் தொட்டார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே இரண்டாவது அதிவேகமாக அரை சதமடித்த இந்திய வீரர் என்ற ஹர்திக் பாண்டியாவின் சாதனையை அவர் சமன் செய்தார்.
இதையும் படிங்க: 1932 முதல் 17 முறை.. பணத்துக்காக மாபெரும் கௌரவத்தை இழந்த தெ.ஆ.. 91 வருட வரலாற்றை மாற்றி எழுதிய நியூசிலாந்து
இருப்பின் 62 ரன்கள் எடுத்திருந்த போது துரதிஷ்டவசமாக ரவீந்திர ஜடேஜாவுடன் ஏற்பட்ட தவறான புரிதலால் அவர் ரன் அவுட்டானது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஆனாலும் முதல் போட்டியிலேயே 62 ரன்கள் அடித்து தன் மீது சந்தேகப்பட்டவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ள சர்பராஸ் கான் தன்னுடைய தேர்வையும் தரத்தை நிரூபித்துள்ளார் என்றால் மிகையாகாது.