
இந்தியாவில் இராணிக் கோப்பை 2024 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லக்னோவில் நடைபெற்றது. அக்டோபர் ஒன்றாம் தேதி துவங்கிய அப்போட்டியில் ரஞ்சிக் கோப்பை சாம்பியன் மும்பை மற்றும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகள் மோதின. அந்தப் போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை தோற்கடித்த மும்பை 27 வருடங்கள் கழித்து இராணிக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 537 ரன்கள் குவித்து ஆரம்பத்திலேயே வலுவான துவக்கத்தைப் பெற்றது. அதிகபட்சமாக சர்பராஸ் கான் இரட்டை சதமடித்து 222*, கேப்டன் ரஹானே 97 ரன்கள் எடுத்தனர். ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு முகேஷ் குமார் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய ரெஸ்ட் ஆஃப் இந்தியா முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானது.
அதிகபட்சமாக அபிமன்யு ஈஸ்வரன் சதமடித்து 191, துருவ் ஜுரேல் 93 ரன்கள் எடுத்த நிலையில் மும்பைக்கு அதிகபட்சமாக சம்ஸ் முலானி, டானுஷ் கோட்டியான் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். பின்னர் 121 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய மும்பை 329-8 ரன்கள் எடுத்த போது போட்டி டிராவில் முடிந்தது. இருப்பினும் பிசிசிஐ விதிமுறைப்படி முதல் இன்னிங்ஸில் முன்னிலைப் பெற்ற காரணத்தால் மும்பை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
மும்பைக்கு அதிகபட்சமாக தானுஷ் கோட்டியான் 114*, பிரிதிவி ஷா 76 ரன்கள் எடுத்த நிலையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியாவுக்கு சரண் ஜெயின் 6 விக்கெட்டுகள் எடுத்தார். அதனால் ரஹானே தலைமையில் 15வது முறையாக இராணி கோப்பையை வென்று மும்பை அசத்தியது. இந்த வெற்றிக்கு இரட்டை சதமடித்து முக்கிய பங்காற்றிய சர்பராஸ் கான் ஆட்டநாயகன் விருது வென்றார். இந்நிலையில் இந்த விருதை சமீபத்தில் காரி விபத்துக்குள்ளான தம்முடைய தம்பி முஸீர் கானுக்கு சமர்ப்பிப்பதாக சர்பராஸ் கூறியுள்ளார்.
மேலும் இபபோட்டியில் அவருக்கும் சேர்த்து சதமடிப்பேன் என்று சொன்னதை நிறைவேற்றி விட்டதாகவும் சர்பராஸ் கான் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “என்னுடைய தந்தையுடன் எடுத்த அனைத்து பயிற்சிகளை வைத்து எனது செயல்முறைகளை பின்பற்ற முயற்சித்தேன். இந்தியா முழுவதும் சென்று நீங்கள் விளையாடும் போது பிட்ச் எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியும்”
இதையும் படிங்க: 15வது முறை.. ருதுராஜ் ஏமாற்றம்.. ட்ராவில் முடிந்தும் 27 வருடம் கழித்து மும்பை இராணி கோப்பை வென்றது எப்படி?
“என்னை போன்ற வீரர்கள் தங்களின் விளையாட்டை முன்னேற்ற அனைத்து விஷயங்களிலும் வேலை செய்ய வேண்டும். சீனியர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். என்னுடைய பலவீனத்தில் நான் வேலை செய்ய வேண்டும். இந்த கோப்பை அணிக்கானது. ஆனால் விபத்தை சந்தித்த முஷீருக்கும் நான் சதம் அடிப்பேன் என்று எனது வீட்டில் சத்தியம் செய்தேன். இது அவருக்கானது” என்று கூறினார்.