இந்தியாவில் இராணி கோப்பை 2024 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதியில் லக்னோவில் துவங்கியது. அதில் 2024 ரஞ்சிக் கோப்பை சாம்பியன் மும்பை மற்றும் ரெஸ்ட் ஆஃப் இந்திய அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற ரெஸ்ட் ஆஃப் இந்தியா கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி முதல் இன்னிங்ஸில் அபாரமாக பேட்டிங் செய்து 537 ரன்கள் குவித்து மிரட்டியது. அதிகபட்சமாக சர்பராஸ் கான் இரட்டை சதமடித்து 222* ரன்களும் கேப்டன் ரஹானே 97, ஸ்ரேயாஸ் ஐயர் 57, டானுஷ் கோட்டியான் 64 ரன்களும் குவித்தனர். ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு அதிகபட்சமாக முகேஷ் குமார் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
மும்பை அசத்தல்:
அதன் பின் களமிறங்கிய ரெஸ்ட் ஆஃப் இந்தியா முடிந்தளவுக்கு போராடியும் தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் மட்டுமே குவித்தது. அந்த அணிக்கு கேப்டன் ருதுராஜ் 9, தமிழக வீரர் சாய் சுதர்சன் 32, இஷான் கிசான் 38, தேவ்தூத் படிக்கல் 16 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதிகபட்சமாக அபிமன்யு ஈஸ்வரன் போராடி சதமடித்து 191, துருவ் ஜுரேல் 93 ரன்கள் எடுத்தனர்.
மும்பைக்கு அதிகபட்சமாக தனுஷ் கோட்டியான் 3, சம்ஸ் முலானி 3, மோகித் அவஸ்தி 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து 121 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய மும்பைக்கு பிரிதிவி ஷா 76 ரன்கள் குவித்து அசத்தினார். ஆனால் எதிர்ப்புறம் கேப்டன் ரஹானே 9, ஸ்ரேயாஸ் ஐயர் 8, சர்பராஸ் கான் 17 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.
27 வருடம் கழித்து:
ஆனால் 8, 10வது இடத்தில் களமிறங்கிய டானுஷ் கோட்டியான் – மோஹித் அவஸ்தி ஆகியோர் ஜோடி சேர்ந்து 9வது விக்கெட்டுக்கு 158 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சவாலை கொடுத்தனர். அதில் தானுஷ் சதமடித்து 114* ரன்களும் மோஹித் 51* ரன்களும் எடுத்தனர். அதனால் 329-8 ரன்கள் குவித்த மும்பை மொத்தம் 450 ரன்கள் முன்னிலை பெற்ற போது 5வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததால் போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: தோனியை சாய்க்க இதை செய்யனும்.. அதை செஞ்சு தான் சிஎஸ்கேவை மும்பை தோற்கடிச்சாங்க.. ஹர்பஜன் ஓப்பன்டாக்
இருப்பினும் பிசிசிஐ விதிமுறைப்படி இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் 121 ரன்கள் முன்னிலை பெற்ற மும்பை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதனால் 1997 – 98க்குப்பின் 27 வருடங்கள் கழித்து மும்பை வரலாற்றில் 15வது முறையாக இராணிக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. கடந்த 27 வருடங்களில் 8 முறை ஃபைனலுக்கு தகுதி பெற்ற அந்த அணி ஒரு வழியாக தற்போது ரஹானே தலைமையில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. மறுபுறம் சரன்ஸ் ஜெயின் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை எடுத்தும் ருதுராஜ் தலைமையிலான ரெஸ்ட் ஆஃப் இந்தியா தோல்வியை சந்தித்தது.



