ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 16ஆம் தேதி அபுதாபியில் நடைபெற்றது. அந்த ஏலத்தில் முதல் ஜோடியில் இளம் இந்திய வீரர் சர்பராஸ் கான் ஏலத்துக்கு வந்தார். இருப்பினும் அவரை எந்த அணியும் வாங்காதது பெரும்பாலான ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் ஓரளவு நல்ல இந்திய வீரராக அறியப்படும் அவர் சயீத் முஸ்டாக் அலி 2025 டி20 கோப்பையில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
குறிப்பாக டிசம்பர் 16ஆம் தேதி மும்பை அணி தங்களுடைய கடைசி போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொண்டது. மகாராஷ்டிராவில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் 217 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய மும்பைக்கு ஜெய்ஸ்வால் 15 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.
காலையில் மாஸ் சாதனை:
இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் அஜிங்க்ய ரஹானே அதிரடியாக விளையாடினார். அடுத்து வந்த சர்பராஸ் கான் அவருடன் ஜோடி சேர்ந்து ராஜஸ்தான் பவுலர்களை வெளுத்து வாங்கினார். குறிப்பாக தன்னை ஐபிஎல் ஏலத்தில் ஏதாவது ஒரு அணியை வாங்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் மிகவும் வெறித்தனமாக விளையாடினார் என்றே சொல்லலாம்.
அந்த வெறித்தனத்துடன் பட்டாசாக விளையாடிய அவர் 15 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார். அதன் வாயிலாக சயீத் முஸ்டாக் அலி கோப்பை வரலாற்றில் மும்பைக்காக வேகமான அரை சதத்தை அடித்த வீரர் என்ற சாதனையையும் சர்பராஸ் கான் படைத்தார். இதற்கு முன் இதே சீசனில் ஹரியானாவுக்கு எதிரான போட்டியில் அவர் 18 பந்துகளில் அரை சதம் அடித்ததே முந்தைய சாதனை.
மாலையில் சிஎஸ்கே பரிசு:
அந்த சாதனை அரை சதத்தை அடித்த கொண்டாடும் போது தன்னுடைய ஃபிட்னஸை நிரூபிக்கும் வகையில் அவர் 3 முறை தண்டால் எடுத்துக் கொண்டாடினார். அதே வேகத்தில் சிறப்பாக விளையாடிய சர்பராஸ் 6 பவுண்டரி 7 சிக்ஸருடன் 73 (22) ரன்களை 331.82 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி அவுட்டானார். மறுபுறம் தொடர்ந்து அசத்திய ரகானே அரை சதமடித்து 72* (41) ரன்கள் குவித்து மும்பையை 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.
இதையும் படிங்க: நமக்கு இருந்த பெரிய பிரச்சனையும் ஓவர்.. சர்பராஸ் கானை ஏலத்தில் எடுத்து சி.எஸ்.கே மாஸ்டர் ஸ்ட்ரோக் – விவரம் இதோ
அந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய சர்பராஸ் கான் ஆட்டநாயகன் விருது வென்றார். அந்த சூழ்நிலையில் தொடர்ந்து நடைபெற்ற ஏலத்தில் 2வது ரவுண்டில் அவரை சிஎஸ்கே அணி 75 லட்சம் தொகை கொடுத்து வாங்கியது. அதனால் காலையில் அரை சதமடித்து மாஸ் காட்டிய போதிலும் விலை போகாத சர்பராஸ் கானுக்கு மாலையில் சிஎஸ்கே அணி பரிசு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.



