221 ரன்ஸ்.. இராணி கோப்பையில் சர்பராஸ் கான் தாண்டவம்.. மும்பைக்காக 52 வருட சாதனையை உடைத்து புதிய சாதனை

- Advertisement -

இராணி கோப்பை 2024 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அக்டோபர் ஒன்றாம் தேதி துவங்கியது. லக்னோவில் நடைபெறும் அப்போட்டியில் ரஞ்சிகோப்பை சாம்பியனான மும்பை மற்றும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகள் மோதுகின்றன. அதில் டாஸ் வென்ற ரெஸ்ட் ஆஃப் இந்தியா கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பைக்கு பிரிதிவி ஷா 4, ஆயுஸ் மாத்ரே 19, ஹர்திக் தோமர் 0 ரன்களில் அவுட்டாகி முகேஷ் குமார் வேகத்தில் ஆட்டமிழந்தனர். அதனால் 37-3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய மும்பை அணிக்கு அடுத்ததாக கேப்டன் ரஹானே – ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்தனர். அதில் ஸ்ரேயாஸ் ஐயர் அரை சதமடித்து 57 ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

மும்பைக்காக இரட்டை சதம்:

அதன் பின் களமிறங்கிய சர்பராஸ் கானுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ரகானே அரை சதமடித்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 130 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதனால் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் துரதிஷ்டவசமாக 97 ரன்களில் அவுட்டாகிய ஏமாற்றத்துடன் சென்றார். அடுத்து வந்த சம்ஸ் முலானி 5 ரன்னில் அவுட்டானாலும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய சர்பராஸ் கான் அரை சதமடித்தார்.

தொடர்ந்து அசத்தலாக பேட்டிங் செய்த அவர் 2வது நாள் உணவு இடைவெளிக்கு முன்பாகவே சதமடித்தார். தம்மை அவுட்டாக்க ருதுராஜ் போட்ட திட்டங்களை உடைத்த சர்பராஸ் கான் தொடர்ந்து ரெஸ்ட் ஆஃப் இந்தியா பவுலர்களை வெளுத்து வாங்கி 150 ரன்கள் கடந்தார். நேரம் செல்ல செல்ல அபாரமாக விளையாடிய அவர் இரட்டை சதமடித்தார். எதிர்புறம் அவருடன் சேர்ந்து விளையாடிய தான்னுஷ் கோட்டியான் 64, சர்துல் தாக்கூர் 34 ரன்கள் எடுத்து அவுட்டானார்கள்.

- Advertisement -

சர்பராஸ் கான் சாதனை:

ஆனால் இந்த பக்கம் அவுட்டாகாமல் அடம் பிடிக்கும் சர்பராஸ் கான் 2வது நாள் முடிவில் 25 பவுண்டரி 4 சிக்சருடன் 221* (276*) ரன்கள் எடுத்துள்ளார். இதன் வாயிலாக இராணி கோப்பையில் மும்பை அணிக்காக இரட்டை சதமடித்த முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார். அத்துடன் இராணி கோப்பையில் அதிகபட்ச ஸ்கோர் செய்த மும்பை வீரர் என்ற சாதனையையும் சர்பராஸ் படைத்துள்ளார்

இதையும் படிங்க: இப்போதான் குணமாகிட்டு வந்தாரு.. இப்போ இதுவேறயா? மீண்டும் பாதிப்பை சந்தித்த முகமது ஷமி – வெளியான தகவல்

இதற்கு முன் கடந்த 1972ஆம் ஆண்டு மும்பைக்காக ராம்நாத் பார்கர் 195 ரன்கள் குவித்ததே முந்தைய சாதனையாகும். அந்த 52 வருட சாதனையை தற்போது உடைத்துள்ள சர்பராஸ் ஆட்டத்தால் 2வது நாள் முடிவில் மும்பை 536-9 ரன்கள் குவித்து இப்போட்டியில் வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது. இதனால் இந்திய அணியில் தன்னுடைய இடத்தை அவர் வலுவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement