இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 14 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்து வெளியேறியது. கடந்த சில ஆண்டுகளாகவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் அணி இம்முறை ஒன்பதாவது இடத்தை பிடித்து வெளியேறியது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
சி.எஸ்.கே அணிக்கு வரும் சஞ்சு சாம்சன் :
இப்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சரிவை சந்திக்க அந்த அணியில் நடைபெற்ற மாற்றங்களே காரணம் என பார்க்கப்படுகிறது. ஏனெனில் துவக்க போட்டிகளில் கேப்டனாக சஞ்சு சாம்சன் விளையாடிய வேளையில் அவருக்கு காயம் ஏற்பட ரியான் பராக் சில போட்டிகளில் கேப்டனாக பங்கேற்றார். அதுமட்டும் இன்றி துவக்க வீரராக விளையாடும் சஞ்சு சாம்சன் சூரியவன்ஷியின் வருகையால் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
இப்படி அடிக்கடி ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாகவே அந்த அணியால் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை என்று தெரிகிறது. அதுமட்டும் இன்றி தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாகம் ரியான் பராக்கை அடுத்த கேப்டனாக நிரந்தரமாக நியமிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படும் வேளையில் அதனால் அதிருப்தியில் இருக்கும் சஞ்சு சாம்சன் அந்த அணியிலிருந்து வெளியேற இருப்பதாகவும் பேசப்படுகிறது.
ஏற்கனவே சி.எஸ்.கே அணிக்காக சஞ்சு சாம்சன் டிரேடிங் செய்யப்படுவார் என்று பலராலும் பேசப்பட்டு வரும் வேளையில் சஞ்சு சாம்சன் அடுத்த 2026 மினி ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கே அணிக்கு வர இருப்பது உறுதியாகியுள்ளதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது. அந்த வகையில் வெளியான தகவலின் படி :
தோனி அடுத்த ஆண்டு நிச்சயம் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவார் என்பதனால் அவருக்கு இணையான ஒரு மாற்று வீரரை சென்னை அணி தேடி வருகிறது/ அந்தவகையில் பார்க்கையில் நீண்ட எதிர்காலம் கொண்ட வீரராக சாம்சன் இருப்பதால் அவர் சிஎஸ்கே அணிக்கு வர அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அப்படி அவர் சிஎஸ்கே அணிக்கு வரும் பட்சத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 2 வீரர்களை சி.எஸ்.கே விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ஹார்டிக் பாண்டியா மட்டும் இல்லனா வெறுங்கையோடு தான் வீட்டுக்கு வந்திருப்போம் – மனம்திறந்த ரோஹித்
அப்படி சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் அணி சிஎஸ்கே அணிக்கு அனுப்பும் பட்சத்தில் அவருக்கு பதிலாக ஷிவம் துபே மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரை கேட்பதாகவும் கூறப்படுகிறது. சிஎஸ்கே அணி இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கு வந்தால் வீரர்களின் மாற்றம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.



