டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 48-வது லீக் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது ஐந்தாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்திற்கு சென்றுள்ளது.
ரசிகர்கள் என்னை இப்படி அழைத்தால் தான் பிடிக்கும் : சஞ்சு சாம்சன்
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் குவித்தது. பின்னர் 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி டெல்லி அணியின் பந்துவீச்சை மிகச் சிறப்பாக எதிர் கொண்டு 17.3 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 159 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது சென்னை அணி சார்பாக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய துவக்க வீரர் சஞ்சு சாம்சன் 52 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர் என 87 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் சென்னை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது செயல்பாடு குறித்து பேசிய சஞ்சு சாம்சன் கூறுகையில் :
ரசிகர்கள் என்னை “சேட்டா” என்று அழைப்பதை விட “சஞ்சு” என்று கூப்பிட்டால் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த போட்டியை பொருத்தவரை என்னுடைய அடிப்படையான பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். கடந்த ஐந்து ஆண்டுகளாகவே நான் என்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மட்டுமே ரன்களை சேர்த்து வருகிறேன். அந்த வகையில் இன்றைய போட்டியிலும் மைதானத்தில் தன்மையை கணித்து ஏதுவான பந்துகளை அடித்து விளையாட வேண்டும் என்று நினைத்தேன்.
இதையும் படிங்க : 8 பேட்ஸ்மேன்களை வைத்திருந்தும் நாங்கள் அடைந்த தோல்விக்கு இதுவே காரணம் – அக்சர் படேல் வருத்தம்
அந்த வகையில் இந்த போட்டியில் எனது பேட்டிங் மிகச் சிறப்பாக இருந்தது. அதேபோன்று இந்த போட்டியின் பவர்பிளேவில் 30 முதல் 35 ரன்கள் வரை விக்கெட் இழப்பின்றி எடுத்தால் எளிதாக இருக்கும் என்று நினைத்தோம். அதேபோன்று ஸ்பின்னர்க்கு எதிராக நிச்சயம் என்னால் மிடில் ஓவர்களில் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கையும் இருந்தது என சஞ்சு சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.



