தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டி நவம்பர் 8ஆம் தேதி டர்பன் நகரில் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடைபெற்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அதிரடியாக விளையாடி 20 ஓவரில் 202-8 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி சதமடித்து 7 பவுண்டரி 10 சிக்ஸருடன் 107 (50) ரன்கள் விளாசினர். தென்னாபிரிக்காவுக்கு அதிகபட்சமாக ஜெரால்ட் கோட்சி மூன்று விக்கெட்டுகளை சாய்த்தார். பின்னர் 203 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்கா அணி ஆரம்பம் முதலே தடுமாற்றமாக விளையாடி 17.5 ஓவரில் 141 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா வெற்றி:
அந்த அணியின் முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறிய நிலையில் அதிகபட்சமாக ஜெரால்ட் கோட்சி 23, ஹென்றிச் க்ளாஸென் 25 ரன்கள் எடுத்தனர். இந்தியாவுக்கு அதிகபட்சமாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 3, ரவி பிஸ்னோய் 3, ஆவேஷ் கான் 2 வீழ்த்தினார்கள். அதனால் 61 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.
முன்னதாக கடைசியாக விளையாடிய வங்கதேச டி20 போட்டியில் சதமடித்து ஆட்டநாயகன் விருது வென்ற சஞ்சு சாம்சன் சாம்சன் இப்போட்டியிலும் சதத்தை பதிவு செய்து ஆட்டநாயகன் விருதை வென்றார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2 ஆட்டநாயகன் விருது வென்ற முதல் இந்திய கிரிக்கெட் கீப்பர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன் தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், இஷான் கிசான் தலா 1 ஆட்டநாயகன் விருது வென்றதே முந்தைய சாதனை.
சாம்சன் சாதனை:
மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் 2 ஆட்டநாயகன் விருது வென்ற முதல் இந்திய விக்கெட் கீப்பர் சாதனையும் சாம்சன் படைத்துள்ளார். இது போக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற முழு அந்தஸ்து பெற்ற நாடுகளுக்கு மத்தியில் அடுத்தடுத்த போட்டிகளில் சதமடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற உலக சாதனையும் சஞ்சு சாம்சன் படைத்துள்ளார்.
இதையும் படிங்க: இப்போ இருக்குற வெறித்தனத்தை நான் விடப்போறதில்ல.. சதம் அடித்த மகிழ்ச்சியில் பேசிய – ஆட்டநாயகன் சஞ்சு சாம்சன்
மேலும் ஒரு சர்வதேச டி20 போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற ரோகித் சர்மாவின் சாதனையும் அவர் சமன் செய்துள்ளார். இதற்கு முன் 2017ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ரோகித் சர்மாவும் 10 சிக்சர்கள் அடித்துள்ளார். அடுத்தடுத்த சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. சஞ்சு சாம்சன்: 218 (111, 107)
2. ருதுராஜ் கெய்க்வாட்: 181 (58, 123*)
3. ரோஹித் சர்மா: 173 (121*, 52*)