களத்தில் விதிமுறையை மீறிய ராஜஸ்தான்.. முதல் தோல்வியுடன் சஞ்சு சாம்சனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை

- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்களுடைய முதல் தோல்வியை பதிவு செய்துள்ளது. சஞ்சு சாம்சன் தலைமையில் விளையாடி வரும் அந்த அணி முதல் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. ஆனால் ஏப்ரல் 10ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற 5வது போட்டியில் குஜராத்திடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோல்வியை சந்தித்தது.

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் 68* (38), ரியன் பராக் 76 (48) ரன்கள் எடுத்த உதவியுடன் 197 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய குஜராத்துக்கு கேப்டன் சுப்மன் கில் சிறப்பாக விளையாடி 6 பவுண்டரி 2 சிக்சருடன் 72 (44) ரன்கள் குவித்தார். இருப்பினும் எதிர்புறம் சாய் சுதர்சன் 35, மேத்யூ வேட் 4, அபினவ் மனோகர் 1, விஜய் சங்கர் 16, சாருக்கான் 14 ரன்களில் அவுட்டானார்கள்.

- Advertisement -

சாம்சனுக்கு தண்டனை:
அதனால் குஜராத்தின் வெற்றிக்கு கடைசி 12 பந்துகளில் 35 ரன்கள் தேவைப்பட்டதால் ராஜஸ்தான் வெல்லும் என்று நம்பப்பட்டது. ஆனால் அப்போது அடித்து நொறுக்கிய ராகுல் திவாட்டியா 22 (11) ரன்களும் ரசித் கான் 24* (11) ரன்களும் விளாசி கடைசி பந்தில் வெற்றியை பறித்தனர். அதனால் அதிகபட்சமாக குல்தீப் சென் 3, சஹால் 2 விக்கெட்டுகள் எடுத்தும் ராஜஸ்தான் தோல்வியை சந்தித்தது.

இருப்பினும் ரன் ரேட் காரணமாக தொடர்ந்து ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. முன்னதாக இந்த போட்டியில் 18வது ஓவரின் முடிவில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 20 ஓவர்களை ராஜஸ்தான் வீசி முடிக்கவில்லை. அதனால் அப்போதே உள்வட்டத்திற்கு வெளியே ராஜஸ்தான் அணியின் 2 ஃபீல்டர்களை குறைத்து நடுவர்கள் தண்டனை கொடுத்தனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை என்று ஐபிஎல் நிர்வாகம் கூறியுள்ளது. இந்த விதிமுறையை 2024 தொடரில் ராஜஸ்தான் அணி முதல் முறையாக மீறியுள்ளதாகவும் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே முதல் தவறு என்பதால் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு மட்டும் இந்த போட்டிக்கான சம்பளத்திலிருந்து 12 லட்சம் அபராதமாக விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: கேப்டன் இன்னிங்ஸ் விளையாடி குஜராத்தை காப்பாற்றிய கில்.. விராட் கோலியை முந்தி புதிய சாதனை

இதை சஞ்சு சாம்சன் ஏற்று கொண்டதால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று ஐபிஎல் நிர்வாகம் கூறியுள்ளது. அத்துடன் இதே தவறை மீண்டும் ராஜஸ்தான் அணி செய்தால் சஞ்சு சாம்சனுக்கு 24 லட்சமும் மற்ற 11 வீரர்களுக்கு தலா 6 லட்சமும் அபராதமாக விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement