இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்த தொடரின் முதல் இரண்டு லீக் ஆட்டங்களில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காத அவருக்கு நேற்று நடைபெற்று முடிந்த ஓமன் அணிக்கு எதிரான போட்டியின் போது டாப் ஆர்டரில் மூன்றாவது இடத்தில் களம்பிறங்க வாய்ப்பு கிடைத்தது.
10 ஆவது இந்திய வீரராக சஞ்சு சாம்சன் அசத்தல் சாதனை :
அந்தவகையில் நேற்றைய போட்டியில் 3 ஆம் இடத்தில் களமிறங்கி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அரைசதம் கடந்து இந்திய அணியின் ரன் குவிப்பிற்கு உதவியிருந்தார். இந்த போட்டியின் போது இந்திய அணி 6 ரன்னுக்கு முதல் விக்கெட்டை இழந்த போது மூன்றாவது வீரராக களம்புகுந்து அபிஷேக் சர்மாவுடன் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 66 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார்.
குறிப்பாக இந்த போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் அடிக்க அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் மட்டும் தான் 45 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 56 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாகவே இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஓமன் அணிக்கு எதிராக நேற்று 3 சிக்ஸர்களை அடித்த அவர் சர்வதேச டி20 அரங்கில் பத்தாவது இந்திய வீரராக மாபெரும் சாதனை பட்டியலில் ஒன்றில் இணைந்துள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : நேற்றைய ஓமன் அணிக்கு எதிரான போட்டியின் போது தான் முதல் சிக்சரை அடிக்கையில் சர்வதேச டி20 போட்டிகளில் 50 சிக்ஸர்களை பூர்த்தி செய்தார்.
இதன் மூலம் டி20 போட்டிகளில் 50 சிக்ஸர்களை கடந்த பத்தாவது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். இவருக்கு முன்னதாக ரோகித் சர்மா, சூரியகுமார் யாதவ், விராட் கோலி, கே.எல் ராகுல், ஹார்டிக் பாண்டியா, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, எம்.எஸ் தோனி, ஷிகர் தவான் ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தனர்.
இதையும் படிங்க : ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரிடம் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் குறித்து – யாஷஸ்வி ஜெய்ஸ்வால் பேச்சு
இவ்வேளையில் பத்தாவது வீரராக சஞ்சு சாம்சனும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமான அவர் இதுவரை 44 போட்டிகளில் விளையாடி 3 சதம் மற்றும் 2 அரைசதம் என 861 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



