
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் கடந்த பல தொடர்களாகவே அபிஷேக் சர்மாவுடன் இணைந்து துவக்க வீரராக டி20 போட்டிகளில் விளையாடி வந்தார். அதனால் அடுத்த 2026 டி20 உலக கோப்பை தொடரின் துவக்க வீரராக அவரே அபிஷேக் ஷர்மாவுடன் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது தான் அவருடைய பேட்டிங் ஆர்டர் திடீரென மாற்றப்பட்டது.
ஏனெனில் டெஸ்ட் அணியின் கேப்டனான சுப்மன் கில்லுக்கு மீண்டும் டி20 போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டதோடு மட்டுமின்றி அவர் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டதால் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் அபிஷேக் சர்மாவுடன் சுப்மன் கில்லே துவக்க வீரராக களமிறங்கி விளையாடி வருகிறார். இதன் காரணமாக துவக்க வீரருக்கான தனது வாய்ப்பை இழந்த அவர் தற்போது மிடில் ஆர்டரில் ஐந்தாவது இடத்தில் விளையாடி வருகிறார்.
ஆனால் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்யும் அளவிற்கு சஞ்சு சாம்சனால் மிடில் ஆர்டரில் சோபிக்க முடியவில்லை என்றும் அவரை தொடர்ச்சியாக டாப் ஆர்டரில் பயன்படுத்த வேண்டும் என்று பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. ஆனால் தனக்கு இந்திய அணியில் எந்த இடத்தில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தாலும் தான் களமிறங்க தயார் என்பது போல சஞ்சு சாம்சன் தனக்கு கிடைக்கும் இடங்களில் எல்லாம் களமிறங்கி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
அந்த வகையில் நேற்று துபாய் மைதானத்தில் நேற்று இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த சூப்பர் போர் சுற்றின் கடைசி ஆட்டத்தில் ஐந்தாவது வீரராக களமிறங்கிய அவர் 23 பந்துகளை சந்தித்து ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 39 ரன்கள் குவித்து இந்திய அணியின் ரன் குவிப்பிற்கு உதவியிருந்தார்.
இந்நிலையில் அவர் நேற்று அடித்த மூன்று சிக்ஸர்களின் மூலம் முன்னாள் இந்திய கேப்டனான மகேந்திர சிங் தோனியின் சாதனை ஒன்றினையும் முறியடித்துள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்காக 85 டி20 போட்டிகளில் விளையாடி 52 சிக்ஸர்களை விளாசியுள்ளார். அதுவே இந்திய விக்கெட் கீப்பராக ஒருவர் சர்வதேச டி20 போட்டிகளில் அடித்த அதிகபட்ச சிக்சராக இருந்து வந்தது.
இதையும் படிங்க : அபிஷேக் சர்மாவுக்கு இந்திய அணி கொடுக்கும் அந்த சுத்ததந்திரம் தான் அவரோட சக்ஸசுக்கு காரணம் – ஜெயசூரியா பாராட்டு
இந்நிலையில் அதனை தகர்த்துள்ள சஞ்சு சாம்சன் 48 போட்டியிலேயே 55 சிக்ஸர்களை அடித்து அந்த பட்டியலில் தோனியை பின்னுக்கு தள்ளியுள்ளார். இவர்கள் இருவருக்கு அடுத்து ரிஷப் பண்ட் 44 சிக்சருடன் மூன்றாவது இடத்திலும், இஷான் கிஷன் 36 சிக்ஸருடன் நான்காவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.