- Advertisement -

IND vs ZIM : 7 வருடம் காத்திருந்து சாதித்த சஞ்சு சாம்சன் – தோனியையும் மிஞ்சி இரட்டை சாதனை, இனியாவது தொடர் வாய்ப்புகள் கிடைக்குமா |

ஜிம்பாப்வேவுக்கு எதிராக ஆகஸ்ட் 20ஆம் தேதியன்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்ட இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. தலைநகர் ஹராரேயில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய இந்தியாவின் தரமான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 38.1 ஓவரில் வெறும் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இன்னசென்ட் கயா 16, கேப்டன் சகப்வா 2, சிக்கந்தர் ராசா 16 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு அதிக பட்சமாக சீன் வில்லியம்ஸ் 42 (42) ரன்களும் ரியன் புர்ள் 39* (47) ரன்களும் எடுத்து ஓரளவு மானத்தைக் காப்பாற்றினார்.

இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து 162 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு இம்முறை தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ராகுல் 1 (5) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். அவருடன் களமிறங்கிய ஷிகர் தவான் தனது பங்கிற்கு அதிரடியாக 4 பவுண்டரியுடன் 33 (21) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த இஷான் கிசான் 6 (13) ரன்களில் அவுட்டாகி நடையை கட்டினார்.

- Advertisement -

அசத்திய சஞ்சு:
அதனால் 97/4 என மிடில் ஓவர்களில் தடுமாறிய இந்தியாவுக்கு 5வது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சனுடன் ஜோடி சேர்ந்த தீபக் ஹூடா பொறுப்புடன் பேட்டிங் செய்து 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்து 25 (36) ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபுறம் அசத்தலாக செயல்பட்ட சஞ்சு சாம்சன் கடைசி வரை அவுட்டாகாமல் அதிரடியாக 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 43* (39) ரன்களை குவித்து சூப்பர் பினிஷிங் கொடுத்தார். அதனால் 25.4 ஓவர்களில் 167/5 ரன்களை எடுத்து எளிதாக வெற்றி பெற்ற இந்தியா இத்தொடரின் முதல் போட்டியிலும் வென்றிருந்த காரணத்தால் 2 – 0* (3) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.

இந்த வெற்றிக்கு அனைவரும் முக்கிய பங்காற்றினாலும் பேட்டிங்கில் மிடில் ஓவர்களில் தடுமாறிய போது பதற்றமடையாமல் 43* (39) ரன்களை 110.26 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டில் விளாசி பினிஷிங் கொடுத்த சஞ்சு சாம்சன் கீப்பராக 3 கேட்ச்களை அட்டகாசமாக பிடித்ததால் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். கடந்த 2015இல் இதே ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான இவருக்கு 5 வருடங்கள் கழித்து 2020இல் தான் 2வது போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அப்படியே 2021 வரை ஒரு வருடத்திற்கு ஒருமுறை 6 மாதத்திற்கு ஒருமுறை என நிலையின்றி கிடைத்த வாய்ப்புகளில் அரை கூட அடிக்கவில்லை என்பதற்காக தேர்வுக்குழுவும் கழற்றிவிட்டு வந்தது.

- Advertisement -

வாய்ப்பு கிடைக்குமா:
இருப்பினும் கடந்த ஜூலையில் அயர்லாந்தில் நடைபெற்ற டி20 தொடரின் 2வது போட்டியில் தீபக் ஹூடாவுடன் 176 ரன்கள் சாதனை பார்ட்னர்ஷிப் அமைத்து முதல் முறையாக அரைசதம் அடித்து 77 ரன்கள் குவித்த போதிலும் அதற்கடுத்த இங்கிலாந்து தொடரில் மனசாட்சியே இல்லாமல் மீண்டும் தேர்வுக்குழு வாய்ப்பு கொடுக்கவில்லை. அதனால் ரசிகர்கள் கொந்தளித்த நிலையில் சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஒரு வழியாக முழுமையான வாய்ப்பு பெற்ற அவர் இந்த போட்டியைப் போலவே கணிசமான ரன்களை எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

அந்த வகையில் 2022இல் இதுவரை பங்கேற்ற 4 ஒருநாள் போட்டிகளில் 115 ரன்களை 57.50 என்ற நல்ல சராசரியிலும் 5 டி20 போட்டியில் 179 ரன்களை 158.40 என்ற சூப்பரான ஸ்டிரைக் ரேட்டிலும் குவித்து கிடைத்த வாய்ப்புகளில் பொன்னாக செயல்பட்டு வருகிறார். அதனால் இனிமேலாவது தேர்வுக்குழு இவர் மீது கருணை காட்டி தொடர்ச்சியான வாய்ப்புகளை கொடுக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

தோனியையும் மிஞ்சி:
முன்னதாக இந்த போட்டியை சிக்ஸர் அடித்து பினிசிங் செய்த அவர் மொத்தமாக 4 சிக்ஸர்களை பறக்கவிட்டார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே மண்ணில் நடந்த ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற ஜாம்பவான் தோனியின் சாதனையை அவர் சமன் செய்தார். அந்தப் பட்டியல்:
1. எம்எஸ் தோனி : 4 (2005)
2. சஞ்சு சாம்சன் : 4 (2022)*
3. எம்எஸ் தோனி : 3 (2005)

மேலும் ஜிம்பாப்வேக்கு எதிராக தனது சர்வதேச கிரிக்கெட்டை துவக்கிய அவர் விடாமுயற்சியால் 7 வருடங்கள் பொறுமையாக காத்திருந்து வைராக்கியத்தில் வென்றது போல் அதே ஜிம்பாப்வேக்கு எதிராக தற்போது முதல் முறையாக ஆட்டநாயகன் விருதை வென்று சாதித்துக் காட்டியுள்ளார். அதைவிட ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஜிம்பாப்வேக்கு எதிராக ஆட்டநாயகன் விருதை வென்ற முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற தோனியையும் மிஞ்சிய சாதனையை அவர் படைத்துள்ளார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஜிம்பாவே மண்ணில் முதல் முறையாக ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய விக்கெட் கீப்பர் என்ற மற்றுமொரு சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

- Advertisement -
Published by