வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 133 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதனால் 3 – 0 (3) என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்து வங்கதேசத்தை தோற்கடித்த இந்தியா சொந்த மண்ணில் மீண்டும் வலுவான அணி என்பதை காண்பித்துள்ளது. ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 297-6 ரன்கள் குவித்து அதிகபட்ச ஸ்கோர் அடித்த முழு உறுப்பு நாட்டு அணியாக சாதனை படைத்தது.
அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 111, கேப்டன் சூரியகுமார் யாதவ் 75 ரன்கள் எடுத்தனர். வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக தன்சிம் ஹசன் 3 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் சேசிங் செய்த வங்கதேசம் 20 ஓவரில் 164-7 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. அதிகபட்சமாக
ஹ்ரிடாய் 63* ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ரவி பிஸ்னோய் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
சரவெடி சாம்சன்:
முன்னதாக இந்தப் போட்டியில் ரிஷாத் ஹுசைன் வீசிய 10வது ஓவரின் கடைசி 5 பந்துகளில் 6, 6, 6, 6, 6 என சஞ்சு சாம்சன் அடுத்தடுத்து 5 சிக்சர்களை பறக்க விட்டு ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தினார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 2வது அதிக ரன்கள் (30) அடித்த இந்திய வீரர் என்ற ரோஹித் சர்மா சாதனையை உடைத்த அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன் 2024 டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவின் மிட்சேல் ஸ்டார்க்கிற்கு எதிராக ரோஹித் சர்மா 28 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. முதலிடத்தில் யுவராஜ் சிங் (36 ரன்கள், இங்கிலாந்தின் ஸ்டுவர்ட் ப்ராட்க்கு எதிராக, 2007) உள்ளார். அந்த வகையில் அதிரடியாக விளையாடிய சாம்சன் 22 பந்துகளில் 50 ரன்கள் தொட்டார்.
அபார சாதனைகள்:
இதன் வாயிலாக வங்கதேசத்துக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அதிவேகமான அரை சதத்தை அடித்த இந்திய வீரர் என்ற ரோஹித் சர்மாவின் சாதனையை உடைத்த சஞ்சு சாம்சன் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 2019ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக ரோஹித் சர்மா 23 பந்துகளில் 50 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. இது போக டி20 கிரிக்கெட்டில் 2வது அதிவேகமான சதத்தை அடித்த இந்திய வீரர் என்ற சூரியகுமார் சாதனையை உடைத்த சஞ்சு சாம்சன் படைத்துள்ளார்.
இதையும் படிங்க: என் மேலயே கடுப்பாகிடுச்சு.. 5 சிக்ஸ்.. அவர் சொன்னதை செஞ்சு காமிச்சுட்டேன்.. ஆட்டநாயகன் சாம்சன் பேட்டி
இதற்கு முன் 2023இல் இலங்கைக்கு எதிராக சூரியகுமார் 45 பந்துகளில் சதமடித்ததே முந்தைய சாதனை. முதலிடத்தில் 2017ஆம் ஆண்டு இந்தூரில் இலங்கைக்கு எதிராக 35 பந்துகளில் சதமடித்து ரோஹித் சர்மா சர்மா உள்ளார். இவை அனைத்தையும் விட சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையும் சஞ்சு சாம்சன் படைத்தார். இதற்கு முன் தோனி, ரிஷப் பண்ட் போன்ற மற்ற இந்திய விக்கெட் கீப்பர்கள் சதமடித்ததில்லை.



