இந்திய கிரிக்கெட் அணியில் சஞ்சு சாம்சன் ஒருவழியாக சிறப்பாக விளையாடத் துவங்கியுள்ளார். 2015இல் அறிமுகமான அவருக்கு 2021 வரை இந்திய அணியில் நிலையான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதே போல சமீபத்திய வருடங்களில் தமக்கு கிடைத்த வாய்ப்புகளில் அவரும் அசத்தில்லை என்பதால் விமர்சனங்களை சந்தித்தார். அந்த நிலையில் புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அவருக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுத்தார்.
அந்த வாய்ப்பிலும் அவர் ஆரம்பத்தில் தடுமாற்றமாகவே செயல்பட்டார். இருப்பினும் கடந்த வங்கதேச தொடரின் கடைசி போட்டியில் சதமடித்த சாம்சன் தற்போது நடைபெறும் தென்னாப்பிரிக்க தொடரின் முதல் போட்டியிலும் சதமடித்துள்ளார். அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அடுத்தடுத்த போட்டிகளில் சதமடித்த முதல் இந்திய வீரராக அவர் சாதனை படைத்துள்ளார்.
சாம்சன் வாய்ப்பு:
மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக சதம் அடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையும் அவர் படைத்தார். இந்நிலையில் சஞ்சு சாம்சன் ஒரு வழியாக போராடி இந்திய அணியில் நிலையான இடத்தை பிடித்துள்ளதாக முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார். எனவே வருங்கால டி20 தொடர்களில் சுப்மன் கில்லுக்கு பதிலாக ஜெய்ஸ்வாலுடன் அவரை துவக்க வீரராக தொடர்ந்து களமிறக்கலாம் என்றும் தினேஷ் கார்த்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சஞ்சு சாம்சன் துவக்க வீரராக தன்னுடைய வாய்ப்பை உறுதி செய்துள்ளார் என்று நினைக்கிறேன். அவரும் ஜெய்ஸ்வாலும் குறைந்தது இன்னும் சில காலம் டி20 கிரிக்கெட்டில் துவக்க வீரர்களாக விளையாட வேண்டும். அவர் டி20 கிரிக்கெட்டுக்கு தகுந்தார் போல் தன்னுடைய டெக்னிக்கல் அளவில் நிறைய மாற்றங்களை செய்துள்ளார்”
ஓப்பனிங் இடம்:
“குறிப்பாக சிக்சர்களை அடிப்பதில் அவர் கவனம் செலுத்துகிறார். கேசவ் மகாராஜுக்கு எதிராக இறங்கி வந்த அவர் பந்தை தவற விட்டார். அவரை மஹாராஜ் அற்புதமாக பந்து வீசி வீழ்த்தினார். ஆனால் சஞ்சு சாம்சன் தன்னுடைய இடத்தைப் பிடித்து காத்திருந்து கவர் திசைக்கு மேல் சிக்சர் அடித்தார். தன்னுடைய லென்த்தை தவற விட்டாலும் அதற்காக சாம்சன் பதற்றமடையவில்லை”
இதையும் படிங்க: வாழ்வா – சாவா வாய்ப்பில் இதை செய்யலன்னா.. 2025 வரை காத்திருக்கணும்.. அபிஷேக்கிற்கு சோப்ரா அட்வைஸ்
“அதை அப்படியே பிடித்து அடுத்த வாய்ப்பில் அவர் அசத்துகிறார். அது மிகவும் கடினமான திறன். அதை சாம்சன் கொண்டுள்ளது ஸ்பெஷலானது” என்று கூறினார். இந்த நிலையில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் வென்ற இந்தியா இரண்டாவது போட்டியில் தோற்றது. எனவே 3வது போட்டியில் வெல்லும் முனைப்புடன் இந்திய அணி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.



