இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்கையில் கிரிஸ் வோக்ஸ் பந்து வீச்சில் கால் பகுதியில் காயமடைந்தார். கிரிஸ் வோக்ஸ் வீசிய யார்க்கர் பந்தினை ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயற்சித்த ரிஷப் பண்ட் அந்த பந்தினை அடிக்க தவறி அந்த பந்து நேரடியாக ரிஷப் பண்டின் காலில் பட்டது. இதனால் வலியுடன் துடித்த ரிஷப் பண்ட் முதலுதவியை நாடினார்.
ரிஷப் பண்டை வாழ்த்திய சஞ்சீவ் கோயங்கா :
பின்னர் களத்திற்குள் வந்த மருத்துவக்குழு அவரை சோதித்துப் பார்க்கையில் கால் விரலில் பந்து பட்டதால் ரத்தம் கசிந்ததோடு மட்டுமின்றி பெரிய வீக்கமும் ஏற்பட்டது. இதனால் தொடர்ந்து பேட்டிங் செய்ய முடியாத அவர் மைதானத்திலிருந்து வெளியேறினார். நீண்ட நேரம் ஆகியும் வலி குறையாததால் மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டார்.
அப்படி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் தெரியவந்தது. இருப்பினும் இந்திய அணி இரண்டாம் நாளின் போது முதல் இன்னிங்சில் தடுமாறிய வேளையில் உடைந்த பாதத்துடன் களத்துக்கு பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் தொடர்ந்து விளையாடி 54 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.
இப்படி காலில் எலும்பு முறிவு ஏற்பட்டாலும் இந்திய அணி சிக்கலில் இருந்த வேளையில் ரிஷப் பண்ட் வந்து விளையாடிய விதத்தை அனைவருமே பாராட்டி இருந்தனர். அதோடு காயத்துடன் பேட்டிங் செய்ய வந்த அவரை மைதானத்திலிருந்த இருநாட்டு ரசிகர்களும் அவரை கைத்தட்டி ஆரவாரமாக வரவேற்றனர். ரிஷப் பண்டின் இந்த அர்ப்பணிப்பு கடந்த சில நாட்களாகவே பலரும் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வரும் வேளையில் ஐபிஎல் தொடரில் அவர் விளையாடும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்காவும் தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் அவரது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் குறிப்பிடப்பட்டதாவது : உடைந்த காலுடன் விளையாடி சில சாதனைகளை தகர்த்துள்ளார். அணிக்கு ஒரு முக்கிய வீரராகவும் முக்கிய நேரத்தில் நின்றுள்ளார். விக்கெட் கீப்பராக அதிக ரன்களை இங்கிலாந்து மண்ணில் அடித்தது மட்டுமின்றி அதிக 5 அரை சதத்தையும் அடித்த வீரராகவும் இருக்கிறார்.
இதையும் படிங்க : 35 ஆண்டுகளுக்கு பின்.. சச்சினுக்கு அடுத்து சாதனை நிகழ்த்திய கில், ஜடேஜா, சுந்தர் – விவரம் இதோ
இந்த போராட்டம் எப்பொழுதுமே ஞாபகத்தில் இருக்கும். விரைவில் நீங்கள் காயத்திலிருந்து குணமடைய வேண்டும் சாம்பியன் என்று அவர் தனது பாராட்டினை தெரிவித்துள்ளார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து அணிக்கெதிரான கடைசி போட்டியில் இருந்து ரிஷப் பந்த் விலகியுள்ள வேளையில் அவருக்கு பதிலாக நாராயணன் ஜெகதீசன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



