
வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. சென்னையில் துவங்கிய அந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால் சமீபத்தில் பாகிஸ்தானை தோற்கடித்ததை போல உங்களையும் வீழ்த்துவோம் என்று சொன்ன வங்கதேசத்தை சாய்த்த இந்தியா ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதைத் தொடர்ந்து இந்தியா – வங்கதேசம் மோதும் இரண்டாவது போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி கான்பூரில் துவங்குகிறது. அதில் முதல் போட்டியில் வெற்றி பெற்றதால் ஜஸ்ப்ரித் பும்ரா உள்ளிட்ட சில முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அப்போட்டியில் இந்திய பிளேயிங் லெவனில் கண்டிப்பாக மாற்றம் நிகழும் என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில் கான்பூர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார். ஏனெனில் தமக்கு கிடைத்த 12 டெஸ்ட் போட்டி வாய்ப்புகளில் சிறப்பாக விளையாடியுள்ள குல்தீப் 53 விக்கெட்டுகளை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே அவரை பெஞ்சில் அமர வைப்பது நியாயமல்ல என்றும் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.
அதனால் ஆகாஷ் தீப்புக்கு பதிலாக குல்தீப்பை 2வது போட்டியில் விளையாட வையுங்கள் என்று கேட்டுக்கொள்ளும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “குல்தீப் யாதவ் எளிதாக நீக்கப்படக்கூடாது என்று நான் கருதுகிறேன். ஒருவேளை சென்னையில் பிட்ச் சுழலுக்கு சாதகமாக இல்லாமல் இருந்திருந்தாலும் அவரால் இந்திய அணி பயனையே சந்தித்திருக்கும்”
“ஏனெனில் வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய பிட்ச்களில் முதல் ஒன்றரை நாட்களில் மட்டுமே உதவிகளை பெறுவார்கள். அதன் பின் பந்து சுழலும் போது குல்தீப் யாதவ் போன்றவரை உங்களால் வெளியே அமர வைக்க முடியாது. எனவே கான்பூரில் இந்தியா இந்த அணுகு முறையை பயன்படுத்த வேண்டும். ஒருவேளை அங்கு பச்சைப் புற்களுடன் கூடிய பிட்ச் அமைக்கப்பட்டு சூரியன் வெளியே இருந்தாலும் அது சில மணி நேரங்கள் மட்டுமே வேகபந்து வீச்சாளர்களுக்கு உதவியை செய்யும்”
இதையும் படிங்க: இந்திய அணியில் விராட், ரோஹித்துக்கு சமமான அவரோட பங்களிப்பு மகத்தானது.. தமீம் இக்பால் பாராட்டு
“அதைப் பயன்படுத்துவதற்கு சிராஜ் மற்றும் பும்ரா போதுமானவர்கள். உங்களிடம் தங்களுடைய தரத்தை நிரூபித்துள்ள ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். எனவே அவர்கள் அனைவரையும் நீங்கள் விளையாட வைக்க வேண்டும்” என்று கூறினார். இதற்கிடையே அக்சர் படேலும் இந்திய 11 பேர் அணியில் வாய்ப்புக்காக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.