- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அஸ்வினுக்கு மட்டும் ஏன் சப்போர்ட் பண்றிங்க? இந்தாங்க ஆதாரம்.. ரோஹித்தை விமர்சித்த சஞ்சய் மஞ்ரேக்கர்

கான்பூர் நகரில் இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி துவங்கியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் வங்கதேசம் மழையால் சீக்கிரமாகவே முடித்துக் கொண்ட முதல் நாள் முடிவில் 107-3 ரன்கள் எடுத்தது. சாத்மன் இஸ்லாம் 24, ஜாகிர் ஹசன் 0, கேப்டன் சாண்டோ 40 ரன்களில் அவுட்டான அந்த அணிக்கு களத்தில் மோனிமுல் ஹைக் 40*, ரஹீம் 6* ரன்களுடன் உள்ளனர்.

முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ரவிச்சந்திரன் அஸ்வின் அதிக விக்கெட்டுகளை எடுத்து உலக சாதனை படைத்துள்ளதை அனைவரும் அறிவோம். அதனால் சான்டோ, மோனிமுல் ஹைக் ஆகிய இடது கை பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்த போது ரவிச்சந்திரன் அஸ்வினை கேப்டன் ரோகித் சர்மா அதிகமாக பயன்படுத்தினார். அந்த வாய்ப்பில் கேப்டன் சாண்டோவை 40 ரன்களில் அவுட்டாக்கி அஸ்வின் அசத்தினார்.

- Advertisement -

அஸ்வினுக்கு ஆதரவு:

இந்நிலையில் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக வலது கை பவுலரை பயன்படுத்த வேண்டும் என்ற பழைய யுக்தியை பின்பற்றி அஸ்வினுக்கு ரோஹித் சர்மா அதிக ஆதரவு கொடுப்பதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சித்துள்ளார். ஆனால் கடந்த 2016 இங்கிலாந்து தொடரில் மகத்தான இடது கை பேட்ஸ்மேன் அலஸ்டர் குக்கை 8 இன்னிங்ஸில் 6 முறை ஜடேஜா அவுட்டாக்கியதாக மஞ்ரேக்கர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தங்களிடம் உள்ள பவுலர்களை பொறுத்து ஒவ்வொரு கேப்டனும் ஒரு அணுகுமுறையை வைத்திருப்பார்கள். அதில் தவறு இல்லை. ஏனெனில் சில கேப்டன்கள் குறிப்பிட்ட பவுலர்களை அதிகம் நம்புவார்கள். இருப்பினும் ஸ்பின் என்று வரும் போது அஸ்வினுக்கு கேப்டன் ரோஹித் சர்மா அதிக சாதகமாக இருப்பதை இந்தத் தொடரில் மட்டும் நான் பார்க்கவில்லை”

- Advertisement -

தரமான ஜடேஜா:

“ஆம் களத்தில் 2 இடது கை பேட்ஸ்மேன்கள் இருந்ததால் அந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம். அது போல பொருத்தமாக பந்து வீசுவது வழிகாட்டுதலாக மட்டுமே இருக்க வேண்டும். கடந்த போட்டியில் ஷாகிப் அல் ஹசன் ரிஷப் பண்ட்டை அதிகமாக தொந்தரவு செய்தார். டெஸ்ட் கிரிக்கெட்டின் தற்போதைய நடைமுறையில் இடது கை வீரர்களுக்கு எதிராக ஜடேஜா போன்ற நல்ல சாதனை படைத்த தரமான பவுலர் உங்களிடம் உள்ளார்”

இதையும் படிங்க: குரங்குகளால் பாதிக்கப்பட்ட கான்பூர் டெஸ்ட்.. திருட்டை தடுக்க மைதான நிர்வாகம் எடுத்த வினோத முடிவு

“அவர் 2016 தொடரில் 8 இன்னிங்ஸில் வெறும் 75 ரன்கள் மட்டும் கொடுத்து 6 முறை அலெஸ்டர் குக்கை அவுட்டாக்கினார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே ஜடேஜாவிடம் பந்தை கொடுக்காதது ஏமாற்றமளிக்கிறது” என்று கூறினார். இந்த நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் மழையால் முழுமையாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -