
2025 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் பி.சி.சி.ஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்து இந்த அணித்தேர்வின் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக சில வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது குறித்தும், சில பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்தும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடம் வழங்காதது தவறு என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் கூறி வந்த வேளையில் தற்போது அவருக்கு ஆதரவாக மேலும் ஒரு முன்னாள் வீரராக சஞ்சய் மஞ்சுரேக்கர் அவரை ஆதரித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :
இந்திய அணி என்ன லாஜிக்கின் அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்கிறது என்பது புரியவில்லை. ஏனெனில் அண்மையில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஒரு வீரருக்கு டி20 தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே வேளையில் டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதில் என்ன நியாயம் இருக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய பின்னர் துணை கேப்டனாக டி20 அணிக்கு வந்துள்ளார். ஆனால் ஷ்ரேயாஸ் ஐயரை பொருத்தவரை ஐபிஎல் தொடரிலும் சரி, இந்திய அணிக்காகவும் சரி தொடர்ந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தும் அவர் ஆசிய கோப்பை அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
ஷ்ரேயாஸ் ஐயரின் தேர்வு குறித்து மிகவம் எடுத்த முடிவு சரியானது கிடையாது. என்னை பொறுத்தவரை ஷ்ரேயாஸ் ஐயரின் சமீபத்திய பார்ம் மிகச் சிறப்பாக இருக்கிறது. நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் 600 ரன்களுக்கு மேல் குவித்திருந்த அவர் ஒரு அணியின் தலைவராகவும் இறுதிப்போட்டி வரை அந்த அணியை கொண்டு சென்றிருக்கிறார்.
இதையும் படிங்க : ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் இடம்பெறாதது ஏன்? – வெளியான தகவல்
இந்த ஆசிய கோப்பை தொடருக்கான அணியில் அவருக்கு இடம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் இப்படி அவருக்கு வாய்ப்பு வழங்காதது நியாயமற்ற ஒரு செயல் என சஞ்சய் மஞ்சரேக்கர் ஷ்ரேயாஸ் ஐயரை ஆதரித்து இந்திய அணியின் நிர்வாகம் செய்த தவறை சாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.