இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக வீரரான சாய் சுதர்சன் 700 ரன்களுக்கு மேல் குவித்து 2025 ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி இருந்தார். இதன் காரணமாக அவருக்கு பல்வேறு தரப்பிலும் பாராட்டுக்கள் குவிந்தது. அதோடு இந்திய அணியிலும் அவர் நீண்ட எதிர்காலம் உடைய பேட்ஸ்மேன் என்றும் அவருக்கு வாய்ப்பினை வழங்க வேண்டும் என்றெல்லாம் அவருக்கு ஆதரவு குவிந்தது.
தமிழக வீரர் சாய் சுதர்சனை ஆதரித்து பேசிய சஞ்சய் மஞ்சரேக்கர் :
அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலும் சாய் சுதர்சன் தேர்வு செய்யப்பட்டார். லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் அவருக்கு அறிமுக வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் அறிமுக போட்டியில் மூன்றாவது இடத்தில் களமிறங்கிய அவர் முதல் இன்னிங்சில் டக் அவுட்டும், இரண்டாவது இன்னிங்சில் 30 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன் காரணமாக ஒரு போட்டியில் விளையாடிய கையோடு இரண்டாவது ஆட்டத்தில் அவர் கழட்டிவிடப்பட்டார். பின்னர் நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கிய மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் இப்படி ஒரே போட்டியில் சாய் சுதர்சனை டெஸ்ட் அணியில் இருந்து நீக்கியது தவறு என்றும் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை தர வேண்டும் என்றும் முன்னாள் இந்திய வீரரான சஞ்சய் மஞ்சுரேக்கர் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது : இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தேர்வு சுவாரசியமாக இருந்தது. ஆனாலும் அதில் எனக்கு உடன்பாடு இல்லை. இருப்பினும் இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டது. இருந்தாலும் சாய் சுதர்சன் விடயத்தில் சில முடிவுகளை என்னால் ஏற்க முடியாது. ஏனெனில் முதல் போட்டியில் அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்ட சாய் சுதர்சனை ஒரே போட்டியில் விளையாடிய கையோடு வெளியில் உட்கார வைத்தது தவறு.
இளம் வீரரான அவர் நாம் எதிர்கால வீரராக பார்த்து இன்னும் வாய்ப்புகளை வழங்க வேண்டும். முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 30 ரன்கள் குவித்து அவர் ஓரளவு சிறப்பாகவே விளையாடியிருந்தார். எனவே என்னை பொறுத்தவரை அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும். இப்படி அவரை வெளியேற்றி விட்டு கருண் நாயரை மூன்றாவது இடத்தில் விளையாட வைப்பது தவறு.
இதையும் படிங்க : ஆஸியில் கமின்ஸ் கொடுத்த இந்த ஆலோசனையே.. இங்கிலாந்தில் நான் விக்கெட்ஸ் எடுக்க காரணம்.. நிதிஷ் பேட்டி
ஏனெனில் கருண் நாயர் மூன்றாவது இடத்தில் விளையாடக்கூடிய வீரர் கிடையாது. சாய் சுதர்சனை இந்திய டெஸ்ட் அணியின் பிளேயிங் லெவனில் இருந்து ஒரே போட்டியோடு நீக்கியது நியாயமற்றது. அவர் நீண்ட எதிர்காலத்திற்கு தகுதியான ஒரு வீரர் என சாய் சதர்சனை ஆதரித்து சஞ்சய் மஞ்சரேக்கர் பேசியது குறிப்பிடத்தக்கது.



