லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஜூலை 10ஆம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டியில் துவங்கியது. 5 போட்டிகள் கொண்ட அந்தத் தொடர் 2 போட்டிகளில் முடிவில் சமநிலையில் இருக்கிறது. அந்த நிலையில் துவங்கிய 3வது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து முதல் நாளில் 251/4 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணிக்கு துவக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி மற்றும் பென் டக்கெட் ஆகியோர் 18, 23 ரன்களில் ஒரே ஓவரில் நித்திஷ் ரெட்டி வேகத்தில் விக்கெட்டை இழந்தனர். மிடில் ஆர்டரில் நிதானமாக விளையாடிய ஓலி போப் 44, ஹாரி ப்ரூக் 11 ரன்னில் அவுட்டானார்கள். மறுபுறம் நங்கூரமாக விளையாடும் ஜோ ரூட் சதத்தை நெருங்கி 99*, கேப்டன் ஸ்டோக்ஸ் 39* ரன்களுடன் களத்தில் இருக்கிறார்கள்.
கமின்ஸ் ஆலோசனைகள்:
முன்னதாக கடந்த ஆஸ்திரேலிய தொடரில் அறிமுகமான நித்திஷ் ரெட்டி சதத்தை அடித்து அசத்தினார். இருப்பினும் பந்து வீச்சில் அவரால் அதிக ஓவர்களை வீசி தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இப்போட்டியில் ஆரம்பத்திலேயே அவர் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் எடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
இந்நிலையில் கடந்த ஆஸ்திரேலிய தொடரில் தம்முடைய ஹைதராபாத் ஐபிஎல் அணி கேப்டன் பட் கமின்ஸ் இங்கிலாந்தின் வானிலை பற்றி கொடுத்த ஆலோசனைகள் தற்போது உதவுவதாக நித்திஷ் ரெட்டி கூறியுள்ளார். இது பற்றி நிதிஷ் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு பின் என்னுடைய பந்து வீச்சில் முன்னேறி சீராக செயல்பட வேண்டும் என்று உணர்ந்தேன்”
முன்னேறிய நிதிஷ்:
“பட் கமின்ஸ் என்னுடைய கேப்டன். ஆஸ்திரேலியாவில் மிகச்சிறப்பாக செயல்பட்ட அவரிடம் சில ஆலோசனைகளை நான் கேட்டேன். ஆஸ்திரேலியாவில் எப்படி பவுலிங் செய்ய வேண்டும் என்று அவர் என்னிடம் சொன்னார். அவருடன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டது எனக்கு நல்ல அனுபவமாக இருந்தது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் பவுலிங் செய்வதில் என்ன வித்தியாசம் என்று அவரிடம் கேட்டேன்”
இதையும் படிங்க: இங்கிலாந்து வீரர்களை மைதானத்திலேயே வைத்து கிண்டல் செய்த இந்திய கேப்டன் சுப்மன் கில் – என்ன நடந்தது?
“என்னுடைய முதல் சுற்றுப்பயணத்தில் பெரிய வித்தியாசம் இருக்காது என்று அவர் சொன்னார். வானிலையைப் பார்த்து அதற்கு தகுந்தார் போல் விளையாடி நிறைய கற்றுக் கொள்ளுங்கள் என்றும் சொன்னார். அவற்றை வைத்து மோர்னே மோர்கெலுடன் இணைந்து வேலை செய்தேன். அவருடன் இணைந்து சில வாரங்களாக வேலை செய்ததில் என்னுடைய பந்து வீச்சில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. எனக்கு இருபுறமும் பந்தை ஸ்விங் செய்யும் திறன் கொஞ்சம் இருப்பதால் அதில் தொடர்ச்சியாக கடினமாக வேலை செய்தோம்” என்று கூறினார்.



