ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கெதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை வகிக்கின்றனர். அதனை தொடர்ந்து எஞ்சியுள்ள மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
பும்ராவுக்கு ஓய்வு வழங்க கூடாது :
மேலும் எஞ்சியுள்ள மூன்று ஆட்டங்களில் இரண்டு ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்று இந்த தொடரை கைப்பற்றினால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்பதனால் இனிவரும் மூன்று போட்டிகளும் இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்த போட்டிகளில் இந்திய அணி வெல்ல வேண்டுமெனில் பும்ரா இந்திய அணிக்கு அவசியம் தேவை.
ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்த பின்னர் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பும்ராவின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு தேவைப்படும்போது அவருக்கு ஓய்வு வழங்க வேண்டும் என்ற கருத்தினை கூறியிருந்தார். இதன் காரணமாக மீதமுள்ள மூன்று போட்டிகளில் நிச்சயம் ஏதாவது ஒரு போட்டியில் அவருக்கு ஓய்வு வழங்கப்படும் என்று தெரிகிறது. ஆனால் இந்த தொடரின் இடையில் பும்ராவிற்கு ஓய்வு வழங்கக்கூடாது என்று பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
அண்மையில் இது குறித்து பேசிய கவாஸ்கர் இரண்டாவது போட்டி இரண்டு நாட்களிலேயே முடிவடைந்ததால் பும்ராவிற்கு எதற்கு ஓய்வு? அவரை தொடர்ந்து விளையாட சொல்லுங்கள் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் கவாஸ்கரின் கருத்தை ஆமோதித்து பேசியுள்ள மற்றொரு முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் பும்ராவை தொடர்ந்து இந்த தொடரின் மூன்று போட்டியிலும் விளையாட வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :
பும்ரா இனிவரும் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் நிச்சயம் விளையாடியாக வேண்டும். இதை நான் பலமுறை சொல்லிவிட்டேன். ஏனெனில் கடந்த மூன்று ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி விளையாடிய போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 34 சதவீத போட்டிகளில் மட்டுமே பும்ரா விளையாடியுள்ளார். இதன் மூலம் அவருக்கு தேவையை விட அதிகமான ஓய்வு வழங்கப்பட்டுள்ளதை நம்மால் பார்க்க முடிகிறது. அதோடு இந்த ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணி வெற்றி பெற வேண்டியது முக்கியமான ஒன்று.
இதையும் படிங்க : 3ஆவது டெஸ்ட் போட்டி துவங்கும் முன்னரே அற்புதத்தை நிகழ்த்தியுள்ள இந்தியா ஆஸதிரேலியா 4-ஆவது டெஸ்ட்
இது போன்ற பெரிய பெரிய தொடர்களில் தான் வீரர்களின் செயல்பாடு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத நினைவில் இருக்கும். அந்த வகையில் இந்திய அணிக்கு மிக முக்கியமான இந்த தொடரில் பும்ராவை விளையாட வைத்துவிட்டு அதன் பிறகு வரும் இருதரப்பு தொடர்களில் அவருக்கு ஓய்வு கொடுக்கலாம். என்னை பொறுத்தவரை இந்த தொடரின் 5 போட்டிகளிலும் அவரை பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்ல ஒரு வாய்ப்பு இருக்கும் என சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.



