ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டுள்ளது பெரிய சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. அதே போல சுப்மன் கில்லை பிசிசிஐ புதிய கேப்டனாக நியமிக்க விரும்புகிறது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள அவர் இங்கிலாந்தில் 754 ரன்கள் அடித்து இந்தியா தொடரை சமன் செய்ய உதவினார்.
அதை வைத்துக்கொண்டு டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 150 – 200 ஸ்ட்ரைக் ரேட்டில் அடிப்பதற்கு தடுமாறக்கூடிய அவரை தேர்வுக்குழுவினர் புதிய துணை கேப்டனாக அறிவித்துள்ளார்கள். இந்நிலையில் அஜித் அகர்கருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்துபவர்களை டி20 போட்டிகளிலும், டி20 கிரிக்கெட்டில் அசத்துபவர்களை டெஸ்ட் போட்டிகளிலும் முடிச்சு போட்டு தேர்ந்தெடுப்பது வேலையாகி விட்டது என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
எதை எதோடு முடிச்சு போடுறீங்க:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இப்போது அல்ல, சமீப வருடங்களாகவே ஒரு ஃபார்மட்டில் அசத்தும் வீரர்களை மற்றொரு ஃபார்மட்டில் தேர்ந்தெடுக்கும் தேர்வுக்குழுவினரின் இந்த போக்கைப் பார்த்து வருகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தும் வீரர்களுக்கு டி20 அணியில் வாய்ப்பளித்து பரிசை அளிக்கப்படுவதைப் பார்க்கிறேன். அது கிரிக்கெட்டில் இல்லாத ஒரு லாஜிக். அது எந்த அர்த்தத்தையும் கொடுப்பதில்லை”
“ஆசியக் கோப்பை வாயிலாக இந்திய டி20 அணிக்கு ஸ்ரேயாஸ் வராதது ஆச்சரியமானது. ஏனெனில் அந்தப் பையன் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடாத சரியான காரணத்திற்காக கழற்றி விடப்பட்டார். அதனாலேயே 2024 இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவர் இதற்கு முன் பேட்டிங் செய்யாதது போல் பேட்டிங் செய்தார். ஆனால் ஐபிஎல் தொடரில் அவர் தன்னை ஃபார்மில் வைத்திருந்தார்”
லாஜிக் இல்லாத அகர்கர்:
“அவரைப் போல் வேறு எந்த பேட்ஸ்மேனும் ஒரு ஐபிஎல் முழுவதும் ஃபார்மை வைத்திருந்ததாக எனக்குத் தெரியவில்லை. 50+ பேட்டிங் சராசரியை வைத்திருந்த அவர் 170 ஸ்ட்ரைக் ரேட்டில் தன்னுடைய அணியின் கேம் சேஞ்சர் பேட்ஸ்மேனாக செயல்பட்டார். அப்படி சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்திய ஒருவரை நீங்கள் சரியான ஃபார்மட்டில் கழற்றி விட்டுள்ளீர்கள்”
“ஆனால் முற்றிலும் மாறுபட்ட ஃபார்மட்டான டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தியரை நீங்கள் டி20 போட்டிகளில் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற இடத்தை தியாகம் செய்து நீங்கள் அவருக்கு வாய்ப்பை வழங்கியுள்ளீர்கள். இப்போதெல்லாம் இந்திய கிரிக்கெட்டில் பிளேயிங் லெவன் மற்றும் அணியை தேர்ந்தெடுக்கும் முறை சிறப்பாக இருப்பதாக எனக்குத் தெரியவில்லை”
இதையும் படிங்க: ஸ்ரேயாஸ்க்கு எதிரான உண்மை ஒருநாள் வெளியே வரும்.. அதுக்கு பின்னாடி என்ன நடக்குதுன்னு தெரியாது.. ஏபிடி
“இங்கிலாந்தில் விளையாடியதைப் போல சில தவறானத் தேர்வுகளையும் தாண்டி ஆசியக் கோப்பையில் இந்தியா சிறப்பாக விளையாட வாய்ப்புள்ளது. ஆனால் தவறு தவறு தான். குறிப்பாக ஸ்ரேயாஸ் தேர்வாளர்களால் மிகவும் தவறாக கழற்றி விடப்பட்டுள்ளார்” என்று கூறியுள்ளார்.



