இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20ஆம் தேதி துவங்கியது. லீட்ஸ் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 471 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 101, கேப்டன் சுப்மன் கில் 147, ரிஷப் பண்ட் 134 ரன்களை குவித்தார்கள்.
இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கேப்டன் ஸ்டோக்ஸ், ஜோஸ் டாங் தலா 4 விக்கெட்டுகள் சாய்த்தனர். முன்னதாக இந்தப் போட்டியையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிசப் பண்ட் தன்னுடைய 7வது சதத்தை அடித்தார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற தோனியின் வாழ்நாள் சாதனையை அவர் உடைத்தார்.
தோனியை விட பெஸ்ட்:
இதற்கு முன் தோனி 90 போட்டிகளில் 6 சதங்கள் அடித்த நிலையில் 44 போட்டியிலேயே ரிஷப் பண்ட் 7 சதங்கள் அடித்துள்ளார். அத்துடன் 79 சிக்ஸர்கள் அடித்துள்ள அவர் தோனியை (78) முந்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை அடித்த இந்திய கீப்பர் என்ற சாதனையும் படைத்துள்ளார். இந்நிலையில் ஆசிய கண்டத்திற்கு வெளியே வெளிநாட்டு மண்ணில் தோனி ஒருமுறை கூட சதத்தை தொட்டதில்லை என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.
ஆனால் அங்கே 4 சதங்களை அடித்துள்ள ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை விட கிரேட் விக்கெட் கீப்பர் என்று அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் எங்கே சதங்களை அடிக்கிறீர்கள் என்பதை நான் நம்புபவன். அந்த வகையில் ரிசப் பண்ட் இங்கிலாந்தில் சதம் அடித்துள்ளார். தென்னாப்பிரிக்காவிலும் சதம் அடித்துள்ள அவர் ஆஸ்திரேலியாவில் 2 சதங்கள் அடித்துள்ளார்”
கிரேட் கீப்பர்:
“மறுபுறம் தோனியின் சதங்களை பார்க்க வேண்டும். அவருடைய ரசிகர்களை நான் மதிக்கிறேன். ஆனால் இந்தியாவைத் தாண்டி இது போன்ற சவாலான சூழ்நிலைகளில் அவர் சதத்தை அடிக்கவில்லை. எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை விட ரிசப் பண்ட் பன்மடங்கு முன்னிலையில் இருக்கிறார். சொல்லப்போனால் ரிஷப் பண்ட் இந்தியாவின் கிரேட்ஸ்ட் டெஸ்ட் பேட்ஸ்மேன் விக்கெட் கீப்பர்”
இதையும் படிங்க: ரிஷப் பண்ட் அதை குருட்டுத்தனமா அடிக்கல.. கில்லுடன் ஹிந்தியில் பேசி மைண்ட் கேம் ஆடிருக்காரு.. சச்சின் பாராட்டு
“இம்முறையும் அவர் 7வது முறையாக 90களில் அவுட்டாவாரோ என்று நான் கொஞ்சம் கவலைப்பட்டேன். அத்தனை சதங்களை அவர் தவற விட்டது என்னால் நம்ப முடியவில்லை. தற்போது அவர் புத்துணர்ச்சியான காற்றை சுவாசிக்கிறார்” என்று கூறினார். முன்னதாக சேனா நாடுகளில் அதிக ரன்கள் குவித்த ஆசிய கீப்பர் என்ற தோனியின் (1731) சாதனையையும் இப்போட்டியில் ரிஷப் பண்ட் (1732*) உடைத்தது குறிப்பிடத்தக்கது.



