மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடப்பு ஆண்டின் முதல் ஐபிஎல் போட்டி நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் இடையே நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சவுரப் திவாரி 42 ரன்கள் குவித்தார்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி துவக்கத்தில் வாட்சன் (4), முரளிவிஜய் (1) என அடுத்தடுத்து ஆட்டமிழழந்து வெளியேற 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து சி.எஸ்.கே தடுமாறியது. பின்னர் விளையாடிய டூப்ளெஸ்ஸிஸ் மற்றும் ராயுடு ஆகியோரின் அபார ஆட்டத்தால் சிறப்பான ரன்குவிப்பை வழங்கியது. ராயுடு 48 பந்துகளில் 71 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
டுபிளசிஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 58 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார். இறுதியில் 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை குவித்து வெற்றிபெற்றது. ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் சிஎஸ்கே ரசிகர்களை சற்றும் ஏமாற்றவில்லை.
இந்நிலையில் சிஎஸ்கே அணியின் இந்த வெற்றி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ள சர்ச்சை வர்ணனையாளரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அதில் : பியூஸ் சாவ்லா மற்றும் அம்பத்தி ராயுடு போன்ற “லோ ப்ரோபைல்” பிளேயர்கள் சிறப்பாக ஆடியதைப் பார்க்க நன்றாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பவுலிங்கில் சாவ்லாவும் பேட்டிங்கிலும் ராயுடுவும் சிறப்பாக விளையாடினார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
So happy for two pretty low profile cricketers Piyush Chawla and Ambati Rayudu. Chawla was sensational with the ball. Bowled the 5th & 16th over too. Rayudu..well…one of the best IPL innings from him based on quality of shots played! Well done CSK!👏👏👏 #IPL2020
— Sanjay Manjrekar (@sanjaymanjrekar) September 19, 2020
இந்த பதிவில் “லோ ப்ரோபைல்” என்று இவர்கள் இருவரின் பெயரை குறிப்பிட்டு அவர் பதிவு செய்துள்ளது அவர்களை தரத்தை தாழ்த்தி கூறும் வகையில் இருப்பதால் இதனைக் கண்ட சி.எஸ்.கே ரசிகர்கள் நீங்கள் என்ன உலகக்கோப்பை வென்ற அணியில் விளையாடியவரா ? அல்லது 10 ஆண்டுகள் இந்திய அணிக்கு ஆடியிருக்கிறீர்களா ? என்று சஞ்சய் மஞ்சரேக்கரை இணையத்தில் கடுமையாக விமர்சித்து தங்களது கருத்துகளைத் தொடர்ந்து அளித்து வருகின்றனர்.