
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடைபெறும் நிலையில் அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களுடைய முதல் வீரராக விராட் கோலியை 21 கோடிக்கு தக்க வைத்துள்ளது. கடந்த 2008 முதல் பெங்களூரு அணிக்காக விராட் கோலி தொடர்ந்து விளையாடி வருகிறார்.
அந்த வாய்ப்பில் அதிக ரன்கள் குவித்த வீரராக சாதனை படைத்து வரும் அவர் முடிந்தளவுக்கு வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். அதன் காரணமாக மீண்டும் அவரை ஆர்.சி.பி தக்க வைத்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இதற்கிடையே கடந்த சில வருடங்களாக கேப்டனாக செயல்பட்டு வந்த டு பிளேஸிஸை இந்த வருடம் பெங்களூரு நிர்வாகம் விடுவித்துள்ளது.
அதனால் தற்சமயத்தில் ஆர்சிபி அணியின் கேப்டன்ஷிப் பதவி காலியாக இருக்கிறது. அந்தப் பதவியை மீண்டும் விராட் கோலி ஏற்பார் என்ற செய்திகளும் காணப்படுகின்றன. இந்நிலையில் சமீபத்திய வருடங்களில் டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடவில்லை என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார். எனவே கோலியை மீண்டும் கேப்டனாக நியமிப்பது சரியான முடிவல்ல என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “உங்களுடைய மனதில் விராட் கோலியின் நட்சத்திர அந்தஸ்தை நீக்கிவிட்டு ஐபிஎல் தொடரில் அவருடைய செயல்பாடுகளை மட்டும் பாருங்கள். குறிப்பாக பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் அவருடைய செயல்பாடுகளை தனித்தனியாக பாருங்கள். அதை பார்த்து விட்டு அவரை மீண்டும் கேப்டனாக நியமிக்கலாமா என்பது பற்றிய சரியான முடிவை எடுங்கள்”
“கடந்த வருடம் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 150. அதற்கு முந்தைய வருடங்களில் 120. எனவே ஒரு டி20 பிளேயராக விராட் கோலி தாக்கத்தை ஏற்படுத்துவாரா? அவர் விராட் கோலியாக இருப்பதால் 95% ரசிகர்கள் கேப்டனாக விரும்புவார்கள். அவருடைய செயல்பாடுகளை பார்க்கும் போது அது போதுமானதாக இல்லை. அதுவே என்னுடைய பிரச்சனை. எனவே நான் உணர்வுபூர்வமாக முடிவெடுக்க மாட்டேன்”
இதையும் படிங்க: பாகிஸ்தானின் ஐடியா சூப்பர்.. அவங்கள பாக்க காத்திருக்கோம்.. இந்தியாவுக்கு சத்தியம் செய்றேன்.. வாசிம் அக்ரம்
“நான் உண்மையிலிருந்து தாண்டி அவர் ஹீரோ என்பதற்காக முடிவை எடுக்க மாட்டேன். டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே அவர் சுமாரான ஃபார்மில் இருக்கிறார். ஆனால் இந்தியாவுக்கு அவர் தேவை. டி20 கிரிக்கெட்டில் அவர் 7 – 8 வருடங்களுக்கு முன்பிருந்த சிறந்த வீரராக தற்போது இல்லை” என்று கூறினார். முன்னதாக ஒரு கோப்பையை கூட வென்று கொடுக்கவில்லை என்ற விமர்சனங்களாலேயே விராட் கோலி ஆர்சிபி கேப்டன்ஷிப் பொறுப்பை துறந்தது குறிப்பிடத்தக்கது.