இந்திய கிரிக்கெட் அணி சமீபத்திய நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது. அதன் காரணமாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது. அந்தத் தோல்விக்கு இந்திய பேட்டிங் துறையின் நம்பிக்கை நட்சத்திரங்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சுமாராக விளையாடியது முக்கிய காரணமானது.
அதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர்கள் ஓய்வு பெற வேண்டுமென்று ஒரு தரப்பு இந்திய ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் சச்சின் போல டெஸ்ட் கிரிக்கெட்டில் 37 வயதை கடந்து விட்ட ரோஹித் சர்மா ஓய்வு பெறுவது அவருடைய கையில் இருப்பதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். அவருடைய கேரியரை அஜித் அகர்கர் நிர்ணயிக்கும் நிலையிலேயே இருப்பதாகவும் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
சச்சின் போல:
மறுபுறம் இப்போதும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் தகுதியைக் கொண்டுள்ள விராட் கோலி ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் தொடரில் அசத்துவதற்கு புஜாரா போல கவுன்டி தொடரில் விளையாடுவது அவசியம் என்றும் மஞ்ரேக்கர் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய வருங்காலத்தை தீர்மானித்தார்”
“அதே போல ரோஹித் சர்மா தனது வருங்காலத்தை தீர்மானிப்பார் என்று நம்புகிறேன். தேர்வு என்பது அவருடைய சொந்த முடிவு. எவ்வளவு காலம் விளையாட முடியும் அல்லது ஒரு வீரராக எவ்வளவு பங்காற்ற முடியும் என்பது உங்களை பொறுத்தது. அதே சமயம் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் அதை தீர்மானிக்கலாம்”
புஜாரா போல:
“ஆனால் விராட் கோலி நிறைய உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் முதல் டெஸ்ட் ஜூன் மாதம் துவங்க உள்ளது. கவுன்டி தொடர் ஏப்ரல் மாதம் துவங்க உள்ளது. எனவே அவர் புஜாரா போல ஏதேனும் ஒரு கவுன்டி அணியில் இணைந்து பயிற்சிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்”
இதையும் படிங்க: இந்திய அணியில் கம்பேக் கனவு இன்னும் கலையல.. திடீர்னு அசத்த இது தான் காரணம்.. கருண் நாயர் பேட்டி
“அதில் நல்ல அறிகுறிகள் தென்பட்டால் விராட் கோலி தொடர்ந்து விளையாடலாம். இல்லையென்றால் விராட் கோலி மீண்டும் தடுமாறுவதையே நாம் பார்க்க முடியும். அது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல. எனவே கவுன்டி தொடரில் விளையாடுவதே விராட் கோலியை பொறுத்த வரை நல்ல விஷயமாக திட்டமாக இருக்கும்” என்று கூறினார்.