வங்கதேசத்துக்கு எதிராக சென்னையில் இந்திய கிரிக்கெட் அணி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 376 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் சதமடித்து 113, ரவீந்திர ஜடேஜா 86, ஜெய்ஸ்வால் 56 ரன்கள் குவித்தனர். வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக ஹசன் மஹ்முத் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன் பின் களமிறங்கிய வங்கதேசம் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன் 32 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து 227 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வரும் இந்தியா 2வது நாள் முடிவில் 81-3 ரன்கள் குவித்து வங்கதேசத்தை விட 308 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
விராட் – ரோஹித் ஏமாற்றம்:
இந்திய அணிக்கு ரோஹித் சர்மா 5, ஜெய்ஸ்வால் 10, விராட் கோலி 17 ரன்களில் அவுட்டான நிலையில் களத்தில் ரிஷப் பண்ட் 12*, கில் 33* ரன்களுடன் உள்ளனர். முன்னதாக இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் தலா 6 ரன்களில் அவுட்டான நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா 2வது இன்னிங்ஸிலும் முறையே 17, 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.
அதற்கு துலீப் கோப்பையில் விளையாடாததே முக்கிய காரணம் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சித்துள்ளார். குறிப்பாக 2024 துலீப் கோப்பையில் அனுபவத்தைக் கருத்தில் கொண்டு விராட், ரோஹித் ஆகியோருக்கு பிசிசிஐ ஓய்வு கொடுத்தது. அப்போது அவர்கள் துலீப் கோப்பையில் விளையாடவில்லையெனில் வங்கதேச தொடரில் தடுமாறுவார்கள் என்று தாம் சொன்னது உண்மையாகியுள்ளதாக மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.
துலீப் கோப்பை தாக்கம்:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது போன்ற பிட்ச்சில் ரோஹித் சர்மாவும் முதலில் பந்து வீச விருப்பினார். எனவே முதல் மணி நேரம் மிகவும் சவாலாக இருக்கும் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். அது போன்ற சூழ்நிலையில் ரோகித் சர்மா நேரத்தை எடுத்து விளையாட முயற்சித்தார் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் சரியான லென்த்தில் வந்த 2 பந்துகள் அவரை சிக்கலில் வைத்தது”
இதையும் படிங்க: சச்சினின் சாதனையை தூளாக்கி உலக சாதனை படைத்த கிங் கோலியை.. காலி செய்த அம்பயர்.. கடுப்பான ரோஹித்
“கடந்த 5 வருடங்களில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாடிய சர்வதேச போட்டிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அவர்கள் துலீப் கோப்பையில் விளையாடியிருக்க வேண்டும் என்று நான் சில வாரங்களுக்கு முன் தெரிவித்திருந்தேன். அதில் விளையாடியிருந்தால் அவர்கள் இந்தப் போட்டியில் குளிர்ச்சியான சூழ்நிலையில் முதல் இன்னிங்ஸில் நன்றாக விளையாடியிருந்திருக்க முடியும் என்று நான் நம்புகிறேன்” எனக் கூறினார்.



