ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெற்ற 29வது போட்டியில் டெல்லி அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை தோற்கடித்தது. அதனால் தங்களுடைய இரண்டாவது வெற்றியைப் பெற்ற மும்பை புள்ளிப்பட்டியலில் முன்னேற்றத்தையும் சந்தித்தது. முன்னதாக அந்தப் போட்டியில் ரோஹித் சர்மா பேட்டிங்கில் பெரிய ரன்கள் எடுக்காமல் ஏமாற்றத்தைக் கொடுத்தார்.
மறுபுறம் 206 ரன்களை துரத்திய டெல்லி கருண் நாயர் – அபிஷேக் போரேல் ஆகியோர் சிறப்பாக விளையாடியதால் 119/1 என்ற நல்ல துவக்கத்தைப் பெற்றது. அவர்களை சரியான நேரத்தில் அவுட்டாக்கிய மும்பை வெற்றிக்கு போராடியது. அப்போது இரவு நேரத்தில் பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதை உணர்ந்த ரோஹித் சர்மா பெவிலியினிலிருந்து கொண்டே இரண்டாவது பந்தை பயன்படுத்துமாறு சிக்னல் கொடுத்தார்.
ரோஹித் கிடையாது:
அதைத்தொடர்ந்து அம்பயரிடம் இரண்டாவது பந்தை வாங்கிய மும்பை அணிக்கு கரன் சர்மா தனது அடுத்தடுத்த ஓவர்களில் ஸ்டப்ஸ், கேஎல் ராகுல் ஆகியோரின் விக்கெட்டை எடுத்தது வெற்றியில் முக்கிய பங்காற்றியது. அந்த வகையில் பெவிலியினில் இருந்து கொண்டே மும்பையின் வெற்றிக்கு உதவிய ரோஹித்தை முன்னாள் வீரர் சஞ்சய் பங்கர் நேரலையில் பாராட்டியது பின்வருமாறு. “இந்த விக்கெட் விழுந்ததற்காக ரோஹித் சர்மாவை பாராட்ட வேண்டும்”
“அதற்காக அவரது தோளில் யாராவது தட்டி பாராட்ட வேண்டும். கரன் சர்மாவும் அதை சிறப்பாக செயல்படுத்தினார்” என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட மற்றொரு முன்னாள் வீரர் சஞ்சர் மஞ்ரேக்கர் உண்மையில் களத்தில் அந்த திட்டத்தை செயல்படுத்திய ஹர்திக் பாண்டியாவுக்கு தான் பாராட்டு செல்ல வேண்டும் என்று தெரிவித்தார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
பாண்டியாவுக்கு கொடுங்க:
“பாராட்டுக்காக அங்கே பலர் இருக்கிறார்கள். ஆனால் அந்த சமயத்தில் அதைக் கேட்டு ஒருவர் இறுதியாக முடிவை எடுப்பது மிகப்பெரிய விஷயம். அது போன்ற சூழ்நிலையில் நீங்கள் பாண்டியாவுக்கு பதிலாக ரோஹித்துக்கு பாராட்டு கொடுத்தால் அது தவறு. யார் வேண்டுமானாலும் பரிந்துரைகள் கொடுக்கலாம். அந்த பரிந்துரை ஒருவேளை தவறாகப் போகும் பட்சத்தில் அனைவரும் பாண்டியாவை விமர்சனம் செய்திருப்பார்கள்”
இதையும் படிங்க: சிஎஸ்கே டிஎன்ஏ பற்றி எனக்குத் தெரியும்.. அதுக்குன்னு பைத்தியக்கார மாவையே அரைக்காத்தீங்க.. ஹைடன் அட்வைஸ்
“எனவே அந்த விக்கெட்டுக்கான மொத்த பாராட்டும் பாண்டியாவுக்கு செல்ல வேண்டும். ஏனெனில் அடுத்தடுத்த தோல்விகளால் விமர்சனங்களை சந்தித்த அவர் கடினமானப் பாதையில் இருக்கிறார். எனவே மும்பையின் இந்த வெற்றிக்காக ரோஹித் சர்மாவுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் கிடைத்தால் அது தவறு. யார் பரிந்துரை செய்தார்கள் என்பதைத் தாண்டி அந்த முடிவை இறுதியாக எடுத்த பாண்டியாவுக்கு தான் பாராட்டு செல்ல வேண்டும்” என்று கூறினார்.



