
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அண்டை நாடுகளாக இருப்பதால் அவ்வப்போது எல்லையிலும் களத்திலும் சண்டையிட்டுக் கொள்வது வழக்கமாகும். எடுத்துக்காட்டாக கடந்த காலங்களில் சாகித் அப்ரிடி – கௌதம் கம்பீர் ஆகியோர் களத்தில் விளையாடும் போது சண்டையிட்டுள்ளார்கள். அதே போல களத்துக்கு வெளியே இந்தியா – பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வது வழக்கமாகும்.
இந்நிலையில் பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் முன்னாள் இந்திய கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்துடன் சண்டை போட்டது பற்றி முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் நினைவு கூர்ந்துள்ளார். 1989ஆம் ஆண்டு கராச்சி மைதானத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் தான் சச்சின் டெண்டுல்கர் 16 வயதில் அறிமுகமாகி நாளடைவில் ஜாம்பவானாக உருவெடுத்தார்.
டிராவில் முடிந்த அப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் தலைமைத் தாங்கினார். அப்போட்டியில் இந்தியா ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த ஒரு சமயத்தில் திடீரென பாகிஸ்தான் ரசிகர் இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டுக்கொண்டே மைதானத்திற்குள் நுழைந்தார். நேராக இந்திய கேப்டன் ஸ்ரீகாந்தை நோக்கி சென்ற அந்த ரசிகர் அவருடைய சட்டையை பிடித்து பொத்தான்களை உடைத்தார்.
அதற்கு ஸ்ரீகாந்தும் கையால் அடித்து அவருக்கு பதிலடி கொடுத்தார். விக்கெட் கீப்பராக இருந்த கிரன் மோர் தங்களுடைய கேப்டன் ஸ்ரீகாந்தை அடிக்க வந்த பாகிஸ்தான் ரசிகரை காலால் எட்டி உதைத்தார். இறுதியில் பாதுகாவலர்கள் உள்ளே நுழைந்து அந்த ரசிகரை அழைத்துச் சென்றார்கள். அது பற்றி அப்போட்டியில் 113* ரன்கள் அடித்த சஞ்சய் மஞ்ரேக்கர் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.
“கராச்சியில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியின் போது நான் மிட் ஆஃப் பகுதியில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்தேன். அப்போது திடீரென உள்ளூர் உடையில் இருந்த ஒருவர் மைதானத்திற்குள் நுழைந்து இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார். அதைப் பார்த்த இந்திய வீரர்களான நாங்கள் எதிர்வினை ஆற்றுவதற்கு முன் அவர் எங்கள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தை நேரடியாகவே தாக்கினார்”
இதையும் படிங்க: ஆர்.சி.பி அணி இந்த 2 பேரை மட்டும் ரிலீஸ் பண்ணா போதும்.. வேறு எந்த மாற்றமும் வேண்டாம் – ஆகாஷ் சோப்ரா கருத்து
“அதன் பின் நடந்தது எல்லாம் விசித்திரமாக இருந்தது. போட்டியின் நடுவே கைகலப்பு ஏற்பட்டது. ஸ்ரீகாந்த் அந்த நபருக்கு பதிலடி கொடுத்தார். ஸ்ரீகாந்த் சட்டைப் பொத்தான்கள் கிழிந்தன. அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் தலையிட முயன்றதால் போட்டி நின்றது. அந்த சண்டையில் நடந்த வேடிக்கையான நிகழ்வு என்னவெனில் கிரண் மோர் தனது கேப்டனை பாதுகாக்க ஃபேடுகளை அணிந்திருந்தபடியே பாகிஸ்தான் நபரை உதைக்கத் தொடங்கினார். அன்றைய நாளில் மைதானத்தில் ஒரு தெருச்சண்டை போன்ற குழப்பம் நிலவியது” என்று கூறினார்.