வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் 2024 டி20 உலகக் கோப்பை ஜுன் மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்தை எதிர்கொள்கிறது. அதைத்தொடர்ந்து இந்தியா தங்களுடைய இரண்டாவது போட்டியில் ஜூன் 9ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பரம எதிரி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
2021 துபாய் தோல்வியை தவிர்த்து டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை எதிர்கொண்ட அனைத்து போட்டிகளிலும் இந்தியா வெற்றி வாகை சூடியுள்ளது. அந்த நிலையில் சமீபத்தில் அயர்லாந்து போன்ற கத்துக்குட்டி அணிகளிடம் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்தது. எனவே இம்முறையும் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெல்லும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.
மஞ்ரேக்கர் கருத்து:
ஆனால் இந்த உலகக் கோப்பையில் உலகின் மற்ற அணிகளை விட பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சு மிகவும் வலுவாக இருப்பதாக ஷாஹித் அப்ரிடி சமீபத்தில் தெரிவித்திருந்தார். எனவே இந்தியா போன்ற அணிகளை வீழ்த்தும் திறமை பாகிஸ்தானிடம் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் இந்தியாவுக்கு பிரச்சனையை கொடுக்கும் அளவுக்கு பாகிஸ்தானின் பவுலிங் அட்டாக் இல்லை என சஞ்சய் மஞ்ரேக்கர் பதிலடி கொடுத்துள்ளார்.
இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “முகமது அமீர் கடைசியாக 7 வருடங்கள் முன்பாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விளையாடினார். எனவே அவருடைய தற்போதைய ஃபார்ம் பற்றிய ஐடியா நமக்கு தெரியாது. ஷாஹின் அப்ரிடி 2 வருடங்களுக்கு முன்பிருந்த பவுலராக தற்போது இல்லை. அவரை இந்தியா சரியாக கையாண்டுள்ளது. இந்த சூழ்நிலையில் நீங்கள் கடந்த ஆசிய கோப்பை மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பையை நினைத்துப் பாருங்கள்”
“அது ஒருதலைப் பட்சமாக இருந்தது. எனவே இம்முறையும் இந்தியாவுக்கு அச்சுறுத்தலை கொடுக்கும் அணியாக பாகிஸ்தானை நான் பார்க்கவில்லை. ஷாஹின் அப்ரிடி, முகமது அமீர் ஆகியோரும் இந்தியாவுக்கு பிரச்சனையாக இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை” என்று கூறினார். அவர் கூறுவது போல 2023 ஆசியக் கோப்பையில் ஷாஹின் அப்ரிடி, ஹரிஷ் ரவூப், நசீம் ஷா ஆகியோர் அடங்கிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சு கூட்டணியை விராட் கோலி அடித்து நொறுக்கினார்.
இதையும் படிங்க: விராட் – ரோஹித் வீட்ல இருந்துருக்கனும்.. பரவால்ல கடைசியா பேட்டிங்ல இதை செஞ்சுட்டு போகட்டும்.. சஞ்சய் மஞ்ரேக்கர்
அதே போல 2023 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா அவர்களை துவம்சம் செய்தார். அதற்கு முன் 2022 டி20 உலகக் கோப்பையில் மெல்போர்ன் மைதானத்தில் அதே பவுலர்களை விராட் கோலி வெளுத்து வாங்கி இந்தியாவுக்கு மகத்தான வெற்றியை பெற்றுக் கொடுத்தார். எனவே இம்முறையும் பாகிஸ்தான் பவுலர்களை சமாளித்து இந்தியா வெல்லும் என்று உறுதியாக நம்பலாம்.



