IND vs WI : திலக், சூர்யகுமார் இல்ல – அவர் தான் 3வது போட்டியின் ரியல் மேட்ச் வின்னர், சஞ்சய் மஞ்ரேக்கர் பாராட்டு

Sanjay Manjrekar
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடி வரும் இளம் இந்திய அணி முதலிரண்டு போட்டிகளில் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி 2016க்குப்பின் முதல் முறையாக அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. அதனால் விமர்சனத்திற்குள்ளான இந்தியா ஆகஸ்ட் 8ஆம் தேதி கயானாவில் நடைபெற்ற முக்கியமான 3வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்து தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் ப்ரெண்டன் கிங் 42, கேப்டன் ரோவ்மன் போவல் 40* ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவர்களில் 159/5 ரன்கள் எடுத்தது.

இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து 160 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் 1, சுப்மன் கில் 6 என தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த போதிலும் நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் இந்த தொடரில் முதல் முறையாக தன்னை உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்பதை நிரூபிக்கும் வகையில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 10 பவுண்டரி 4 சிக்சருடன் 83 (44) ரன்கள் குவித்தார்.

- Advertisement -

ரியல் மேட்ச் வின்னர்:
அவருடன் 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த திலக் வர்மா மீண்டும் சிறப்பாக செயல்பட்டு 49* ரன்களும் கேப்டன் பாண்டியா 20* ரன்களும் எடுத்ததால் 17.5 ஓவரிலேயே இலக்கை எட்டிய இந்தியா சிறப்பான வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற சூரியகுமார் மற்றும் 20 வயதிலேயே மீண்டும் அசத்தி பலரின் பாராட்டுகளைப் பெற்ற திலக் வர்மாவை விட பந்து வீச்சில் 3 விக்கெட்டுகளை எடுத்த குல்தீப் யாதவ் தான் இந்தியாவுக்கு உண்மையான வெற்றியை பெற்றுக் கொடுத்த ரியல் மேட்ச் வின்னர் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் பாராட்டியுள்ளார்.

குறிப்பாக முதலிரண்டு போட்டிகளில் இந்தியாவை அடித்து நொறுக்கி தோல்வியை பரிசளித்த நிக்கோலஸ் பூரானை 20 (12) ரன்களிலும் நங்கூரமாக நின்று சவாலை கொடுத்த ப்ரண்டன் கிங்கை 42 (42) ரன்களிலும் முரட்டுத்தனமாக அடிக்கக்கூடிய ஜான்சன் சார்லஸ் 12 (14) ரன்களிலும் குல்தீப் யாதவ் அவுட்டாக்கிய காரணத்தினாலேயே வெஸ்ட் இண்டீஸை 159 ரன்களுக்கு கட்டுப்படுத்தி வெல்ல முடிந்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ட்விட்டரில் பாராட்டியுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“சூரியகுமார் மீண்டும் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் என்னைப் பொறுத்த வரை குல்தீப் தான் ரியல் மேட்ச் வின்னர். ஏனெனில் டாப் ஆர்டரில் நிக்கோலஸ் பூரான் உட்பட 3 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்து வெஸ்ட் இண்டீஸை 159 ரன்களுக்கு கட்டுப்படுத்த அவர் முக்கிய பங்காற்றினார். சிறப்பாக செயல்பட்டீர்கள் குல்தீப்” என்று கைதட்டி பாராட்டியுள்ளார். அவர் கூறுவது போல இந்த சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரில் இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய குல்தீப் டி20 தொடரின் முதல் போட்டியில் ஒரு விக்கெட் எடுத்து சிறப்பாக செயல்பட்டும் காயமடைந்ததால் 2வது போட்டியில் பங்கேற்கவில்லை.

இருப்பினும் 3வது போட்டியில் காயத்திலிருந்து குணமடைந்ததும் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு சிறப்பாக பந்து வீசிய அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை எடுத்த இந்திய பவுலர் என்ற சாதனையும் உலக அளவில் 2வது வீரர் என்று பெருமையும் பெற்றார். கடந்த 2017இல் அறிமுகமாகி 2019 உலகக்கோப்பையில் முதன்மை ஸ்பின்னராக விளையாடிய அவர் பின்னர் ஃபார்மை இழந்து தடுமாறியதால் 2021 டி20 உலக கோப்பையிலும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியிலும் கழற்றி விடப்பட்டார்.

இதையும் படிங்க:கண்டிப்பா என்னை உலககோப்பை தொடரில் பாப்பீங்க. ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த – தினேஷ் கார்த்திக்

அதற்கிடையே காயத்தை சந்தித்து மேலும் பின்னடைவுக்குள்ளான அவர் மனம் தளராமல் போராடி ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் சிறப்பாக செயல்பட்டு கம்பேக் கொடுத்தார். அதில் தற்போது இந்திய அணியில் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளிலும் அபாரமாக செயல்படுவதால் 2023 உலகக்கோப்பையில் குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்படுவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement