- Advertisement -
இந்திய கிரிக்கெட்

50ஸ் பற்றி கவலைப்படாம அடிச்சு நொறுக்குறாங்க.. இந்திய டி20 அணியின் சுயநலமற்ற முடிவுக்கு மஞ்ரேக்கர் பாராட்டு

இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடத் துவங்கியுள்ளது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்த இந்தியா 1 – 0* (5) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 133 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 68 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்ததாக விளையாடிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் 26 ரன்கள் விளாசி நல்ல துவக்கத்தை கொடுத்தார். அப்படியே அபிஷேக் ஷர்மா 79 திலக் வர்மா 19* ரன்கள் அடித்து 19.5 ஓவரிலேயே வெற்றி பெற வைத்தார்கள்.

- Advertisement -

சுயநலமற்ற அணுகுமுறை:

அந்த வகையில் வலுவான இங்கிலாந்து அணியை முதல் போட்டியிலேயே தோற்கடித்துள்ள இந்தியா இத்தொடரில் வெற்றி நடை போடத் துவங்கியுள்ளது. இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி சுயநலமின்றி விளையாடும் அணுகுமுறையை கையில் எடுத்துள்ளது பாராட்டுக்குரியது என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். குறிப்பாக அரை சதத்தை பற்றி கவலைப்படாமல் இந்திய வீரர்கள் பயமின்றி விளையாடுவதாக அவர் பாராட்டியுள்ளார்.

இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “பயமற்ற கிரிக்கெட் என்ற இந்திய அணியின் இந்த புதிய அணுகு முறையை நான் விரும்புகிறேன். தனிநபர் 50 ரன்கள் பற்றி எந்த தயக்கமும் இந்திய அணியில் இல்லை. டி20 கிரிக்கெட்டில் சுயநலமற்ற கிரிக்கெட்டர் எப்போதுமே மிகவும் ஆபத்தானவர்” என்று பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

புதிய இந்தியா:

அவர் கூறுவது போல 2024 டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையில் சுயநலமின்றி அதிரடியாக விளையாடி இந்தியா வென்றது. அந்த அணுகுமுறையை 2023 உலகக் கோப்பையிலேயே ரோகித் சர்மா உருவாக்கினார். தற்போது அவர் ஓய்வு பெற்றாலும் புதிய கேப்டன் சூரியகுமார் தலைமையில் இந்திய வீரர்கள் அதை தொடர்கிறார்கள்.

இதையும் படிங்க: குரு யுவ்ராஜ் சிங்கின் 2007 டி20 உ.கோ சாதனையை உடைத்த அபிஷேக்.. இங்கிலாந்துக்கு எதிராக புதிய சாதனை

அந்த அணுகு முறையில் கடந்த இலங்கை, வங்கதேசம், தென்னாப்பிரிக்க டி20 தொடர்களில் இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றது. அடுத்த 2026 டி20 உலகக் கோப்பையில் சொந்த மண்ணில் இந்தியா நடப்பு சாம்பியனாக விளையாட உள்ளது. அந்தத் தொடரிலும் இதே போல சுயநலமற்ற கிரிக்கெட்டை விளையாடி இந்தியா வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகும்.

- Advertisement -