ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளது. முதல் போட்டியில் அயர்லாந்தை எளிதாக தோற்கடித்த இந்தியா 2வது போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானிடம் போராடி மகத்தான வெற்றி கண்டது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா வெறும் 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பந்து வீச்சில் அனலாக செயல்பட்ட இந்திய பவுலர்கள் 20 ஓவரில் பாகிஸ்தானை 113 ரன்களுக்கு கட்டுப்படுத்தினர். அதனால் டி20 கிரிக்கெட்டில் ஆல் அவுட்டான போட்டியில் முதல் முறையாக வெற்றி கண்டு இந்தியா சாதனை படைத்தது. இந்திய அணிக்கு பேட்டிங்கில் அதிகபட்சமாக அக்சர் பட்டேல் 20, ரிஷப் பண்ட் 43 ரன்கள் எடுத்தனர்.
மஞ்ரேக்கர் அதிருப்தி:
பந்து வீச்சில் ஹர்திக் பாண்டியா 2, ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். குறிப்பாக 4 ஓவரில் 14 ரன்கள் மட்டும் கொடுத்த ஜஸ்ப்ரித் பும்ரா நங்கூரமாக விளையாடிய முகமது ரிஸ்மான் உள்ளிட்ட 3 முக்கிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். அதனாலேயே அவர் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
சொல்லப்போனால் அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியிலும் ஆட்டநாயகன் விருது வென்ற அவர் இந்த உலகக் கோப்பையில் இந்தியாவின் வெற்றி நாயகனாக ஜொலித்து தருகிறார். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டித் துவங்கும் முன் விராட் கோலியை மட்டுமே ஊடகங்கள் பெரிதாக பாராட்டி கொண்டாடியதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
அத்துடன் விராட் கோலியை விட தற்சமயத்தில் ஜஸ்ப்ரித் பும்ரா தான் தனி ஒருவனாக இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருவதாகவும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இந்திய ஊடகங்கள் விராட் கோலி மீது வெறித்தனமாக இருந்த போது ஜஸ்ப்ரித் பும்ரா மிகவும் அமைதியாக இந்தியாவுக்கான போட்டிகளை தனி ஒருவனாக வென்று கொடுத்துள்ளார்”
இதையும் படிங்க: 4 ரன்ஸ் மட்டுமல்ல.. அம்பயர் அந்த 2 ரன்களையும் கொடுக்காம தோற்கடிச்சுட்டாரு.. வங்கதேச வீரர் வேதனை
“இப்போது மட்டுமல்லாமல் சில காலமாகவே அவர் தான் இந்திய அணியின் சிறந்த வீரராக செயல்பட்டு வருகிறார்” என்று கூறினார். அவர் கூறுவது போல அப்போதும் இப்போதும் இந்திய கிரிக்கெட்டில் பவுலர்களை விட பேட்ஸ்மன்களே அதிக பாராட்டுகளை பெறுவது வழக்கமாகும். இருப்பினும் தற்போது தன்னுடைய திறமையால் ரோஹித், விராட் கோலிக்கு நிகராக பும்ராவும் சிறப்பாக விளையாடி பாராட்டுகளைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.