200 சதங்கள் அடிச்சாலும் சச்சினாக முடியாது, விராட் கோலியை விமர்சித்த கம்பீர் – மஞ்ரேகர் கொடுத்த பதிலடி இதோ

Advertisement

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பைக்கு தயாராகும் பயணத்தை வெற்றியுடன் துவங்கியுள்ளது. ஜனவரி 10ஆம் தேதியன்று கௌகாத்தியில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 373/7 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 83, சுப்மன் கில் 70 என தொடக்க வீரர்கள் நல்ல ரன்களை எடுக்க நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சதமடித்து 113 (87) ரன்கள் விளாசினார்.

Virat Kohli 113

அதை தொடர்ந்து 374 ரன்களை துரத்திய இலங்கை முடிந்தளவுக்கு போராடிய போதிலும் 50 ஓவர்களில் 306/8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக மிடில் ஆர்டரில் வெற்றிக்கு போராடிய கேப்டன் சனாக்கா சதமடித்து 108* (80) ரன்களும் நிசாங்கா 72 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி சதமடித்து முக்கிய பங்காற்றிய விராட் கோலி ஆட்டநாயகன் விதை வென்றார். கடந்த 15 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் இதே போல் நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் அவர் 2019க்குப்பின் சதமடிக்க முடியாமல் தவித்த போது அணியை விட்டு நீக்குமாறு நிறைய முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.

- Advertisement -

கம்பீருக்கு பதிலடி:
இருப்பினும் மனம் தளராமல் போராடி 2022 ஆசிய கோப்பையில் சதமடித்து பார்முக்கு திரும்பிய அவர் டி20 உலகக்கோப்பையில் அற்புதமாக செயல்பட்டு தற்போது ஒருநாள் கிரிக்கெட்டிலும் சதமடித்து முழுமையான பார்முக்கு திரும்பியுள்ளார். குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் 45 சதங்களையும் ஒட்டுமொத்தமாக 73 சதங்களையும் அடித்துள்ள அவர் முதலிடத்தில் முறையே 49, 100 சதங்களுடன் இருக்கும் சச்சின் டெண்டுல்கரின் வரலாற்றுச் சாதனையை விரைவில் முறியடிக்க அதிக வாய்ப்புள்ளது.

Gambhir

இந்நிலையில் எவ்வளவு சதங்கள் அடித்தாலும் சச்சின் டெண்டுல்கருடன் விராட் கோலியை ஒப்பிட முடியாது என்று முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் இப்போட்டியில் நேரலையில் விமர்சித்தது பின்வருமாறு. “இது சாதனையை பொறுத்ததல்ல. நிச்சயமாக ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி சச்சின் டெண்டுல்கரை விட அதிக சதங்கள் அடிப்பார். ஏனெனில் இப்போது விதிமுறைகள் மாறிவிட்டன. அப்போதைய காலத்தை இப்போதுடன் ஒப்பிட முடியாது. ஏனெனில் அப்போது ஒரு இன்னிங்ஸில் 1 புதிய பந்து மட்டுமே பயன்படுத்தப்பட்ட நிலையில் இப்போது 2 புதிய பந்து பயன்படுத்தப்படுவதுடன் உள்வட்டத்திற்குள் 5 பீல்டர்கள் நிறுத்தப்படுகிறார்கள். இருப்பினும் ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி சிறந்து விளங்குவதால் இந்த சாதனையை நிச்சயம் முறியடிப்பார்” என்று கூறினார்.

- Advertisement -

ஆனால் சச்சின் டெண்டுல்கர் தொடக்க வீரராக 2 ஃபீல்டர்கள் மட்டும் வெளியே நிற்கும் பவர்பிளே ஓவர்களை பயன்படுத்தி தான் ஒருநாள் கிரிக்கெட்டில் 45 சதங்கள் (எஞ்சிய 4 சதங்கள் ஓப்பனிங் வீரராக அல்லாமல் அடித்தது) அடித்ததாக அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றொரு முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் பதிலடி கொடுத்து பேசியது பின்வருமாறு. “அவர் ஒவ்வொரு போட்டியிலும் முதல் பந்தை எதிர்கொள்வதற்கு தொடக்க வீரர் அல்ல. விராட் கோலி பெரும்பாலான சமயங்களில் 3வது இடத்தில் விளையாடு கிறார் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்”

Sanjay

“எனவே அவர் சச்சின் டெண்டுல்கரை ஒருநாள் போட்டிகளில் மிஞ்சுவார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. குறிப்பாக எஞ்சியிருக்கும் இன்னும் 4 சதங்களை இந்த வருடத்தில் அல்லது அடுத்த ஒன்றரை வருடத்தில் அடிப்பார். இந்த வருடம் 50 ஓவர் உலக கோப்பையும் இருப்பதால் அது விரைவில் நடைபெறும் என்று நம்பலாம்” என்று கூறினார். அவர் கூறுவது போல இந்த போட்டியில் கூட 20வது ஓவரில் தான் விராட் கோலி களமிறங்கினார்.

இதையும் படிங்கமைதானத்தின் தன்மையை பாத்த அப்புறம் தான் நான் அந்த முடிவையே எடுத்தேன் – ஆட்டநாயகன் விராட் கோலி

அத்துடன் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட முடியாது என்றாலும் தற்போதைய நவீன கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு நிகராக யாரும் செயல்படவில்லை. அப்படி இருந்தும் வேண்டுமென்றே சச்சினுடன் ஒப்பிட்டு விராட் கோலிக்கு எதிராக வன்மத்தை காட்டும் இந்த வேலையை எப்போது தான் கம்பீர் நிறுத்தப் போகிறார் என்று ரசிகர்களும் பதிலடி கொடுக்கிறார்கள்.

Advertisement