
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 19ஆம் தேதி துவங்குகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற 2 போட்டிகள் கொண்ட அந்தத் தொடரை வெல்வதற்கு இந்தியா தயாராகியுள்ளது. மறுபுறம் சமீபத்தில் பாகிஸ்தானை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து வங்கதேசம் வரலாற்றுச் சாதனை படைத்தது.
அதனால் பாகிஸ்தானை போல இந்தியாவையும் தோற்கடிப்போம் என்று வங்கதேச அணியினர் தொடர்ச்சியாக சவால் விடுத்து வருகிறார்கள். இருப்பினும் கடந்த 12 வருடங்களாக சொந்த மண்ணில் இந்தியா உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தோற்காமல் இருந்து வருகிறது. அதனால் வங்கதேசத்தையும் வீழ்த்தி இந்தியா வெல்லும் என்பதே இங்குள்ள ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.
இந்நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் இந்திய அணி சுழலுக்கு சாதகமான பிட்ச்களை அமைக்கக்கூடாது என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். இல்லையெனில் வங்கதேசத்திடம் சொந்த மண்ணிலேயே வெற்றி பெறுவது கடினமாகி விடும் என்று அவர் எச்சரித்துள்ளார். ஏனெனில் 2023ஆம் ஆண்டு இந்தூரில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது போல சமீப காலங்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களிடம் சொந்த மண்ணிலேயே தடுமாறுவதாக மஞ்ரேக்கர் கவலை தெரிவித்துள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “வங்கதேசத்திடம் ஷாகிப் இருக்கிறார். மிகப்பெரிய அனுபவத்தைக் கொண்டுள்ள அவர் சமீபத்திய டெஸ்ட் போட்டிகளில் பவுலராக அதிகம் விளையாடியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 19 முறை 5 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் சுழலுக்கு சாதகமான பிட்ச்சை அமைத்தால் இந்தியாவுக்கு உடனடியாக அச்சுறுத்தலை கொடுப்பார்”
“அதே போல 2022ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது மெஹதி ஹசன் கிட்டத்தட்ட தனியாளாக இந்தியாவை வீழ்த்தும் அளவுக்கு சவாலை கொடுத்தார். அது போக டைஜூல் இஸ்லாம் மற்றொரு இடது கை அனுபவமிக்க ஸ்பின்னராக உள்ளார். மேலும் வெளிநாடுகளில் ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்ளும் முஸ்பிக்கர் ரஹீம் போன்ற பேட்ஸ்மேன்களும் வங்கதேசத்திடம் உள்ளனர்”
இதையும் படிங்க: அந்த டிபார்ட்மென்ட் ஃபார்மில் இருக்கு.. பாகிஸ்தான் மாதிரியே இந்தியாவையும் சாய்ப்போம்.. வங்கதேச வீரர் சவால் பேட்டி
“இந்திய சூழ்நிலைகளில் உங்களால் வேகத்துக்கு சாதகமான பச்சை புற்கள் கூடிய பிட்ச்சை கொண்டிருக்க முடியாது. ஆடுகளங்கள் கொஞ்சம் சுழலும் போது இந்திய பேட்ஸ்மேன்களும் கொஞ்சம் தடுமாறுகின்றனர். எனவே எதிரணியில் 3 நல்ல ஸ்பின்னர்கள் இருக்கும் சூழ்நிலையில் ஒருவேளை இத்தொடரில் இந்தியா சுழலுக்கு சாதகமான பிட்ச்களை அமைத்தால் வங்கதேசத்தை வீழ்த்துவது கொஞ்சம் கடினமாகி விடும்” என்று கூறினார்.