இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 24ஆம் தேதி புனே நகரில் துவங்கியது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்திடம் 36 வருடங்கள் கழித்து இந்தியா சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்தது. அதனால் ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்துள்ள இந்தியா தொடரை வெல்ல இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்திய அணியில் கடந்த போட்டியில் சுமாராக விளையாடிய ராகுல், சிராஜ் ஆகியோர் நீக்கப்பட்டு ஆகாஷ் தீப், சுப்மன் கில் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அதை விட குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அணிக்குள் வந்தது பலருக்கும் ஆச்சரியமாக அமைந்தது.
கவாஸ்கர் அதிருப்தி:
குறிப்பாக நியூசிலாந்து அணியில் அதிக இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதால் அவர்களுக்கு சவாலைக் கொடுக்க வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நேற்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்திருந்தார். அதே காரணத்தால் இன்று அவர் அணிக்குள் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றே சொல்லலாம். ஆனால் அதற்கு முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் தெரிவித்த விமர்சனம் பின்வருமாறு. “வாஷிங்டன் சுந்தரின் தேர்வு இந்திய அணி தங்களுடைய பேட்டிங்கை பற்றி கவலைப்படுகிறார்கள் என்பது எனக்கு காட்டுகிறது. அவர் ஆஃப் ஸ்பின் பந்துகளை வீசுபவர் மட்டுமல்ல லோயர் ஆர்டரில் நிறைய ரன்களை எடுத்துக் கொடுக்கக் கூடியவர். ஆம் நியூசிலாந்து அணியில் நிறைய இடதுகை பேட்ஸ்மேன்கள் உள்ளனர்”
காமன் சென்ஸ் தேர்வு:
“அவர்களுக்கு எதிராக பந்தை வெளியே இழுக்கக்கூடிய குல்தீப் யாதவை நான் தேர்ந்தெடுத்திருப்பேன். பேட்டிங்கிலும் அவர் ஓரளவு நல்ல ரன்கள் எடுப்பார். கண்டிப்பாக சுந்தர் அளவுக்கு ரங்கள் எடுக்க மாட்டார்” என்று கூறினார். இந்நிலையில் அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இது பொது அறிவு (காமன் சென்ஸ்) நிறைந்த தேர்வு”
இதையும் படிங்க: இரண்டாவது டெஸ்டில் கே.எல் ராகுலை நீக்கி சர்பராஸ் கானுக்கு இடம் குடுக்க என்ன காரணம்? – விவரம் இதோ
“நல்ல ஃபார்மில் இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் (ஆகாஷ் தீப்) வந்துள்ளார். பிட்ச் அதிகமாக சுழலும் போது குல்தீப் போன்ற ஆர்டிஸ்ட் தேவையில்லை. வேகத்துடன் வீசக்கூடிய உயரமான விரல் ஸ்பின்னர் (சுந்தர்) அதை செய்வார்” என்று கூறினார். இதையடுத்து சிறப்பாக விளையாடி தனது தேர்வை சுந்தர் நியாயப்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு காணப்படுவது குறிப்பிடத்தக்கது.



