இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக இளம் வீரர் சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த நியூசிலாந்து, ஆஸ்திரேலியா தொடர்களில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இந்தியா 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. அந்த தோல்விகளால் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து ஓய்வு பெற்றனர். அடுத்ததாக இங்கிலாந்து மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
அந்தத் தொடரில் சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 2021ஆம் ஆண்டு அறிமுகமான அவர் ஆஸ்திரேலியாவில் காபா டெஸ்ட் போட்டியில் 91 ரன்கள் அடித்து இந்தியாவின் சரித்திர வெற்றியில் பங்காற்றினார். ஆனால் அதைத் தவிர்த்து வெளிநாட்டு மண்ணில் தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவித்திராத அவர் டெஸ்ட் கேப்டன்ஷிப் அனுபவத்தைக் கொண்டிருக்கவில்லை.
பட்டோடிக்கு பின்:
சொல்லப்போனால் ஒரு வீரராக அவர் வெறும் 32 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இருப்பினும் வருங்காலத்தில் அசத்துவார் என்ற நம்பிக்கையுடன் அவருக்கு கேப்டன்ஷிப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. எப்படி இருந்தாலும் இளம் வீரர்களுடன் சுப்மன் கில் தலைமையில் சவாலான இங்கிலாந்தில் களமிறங்கும் இந்தியா வெற்றி பெறுவது கடினம் என்பதே பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இந்நிலையில் இந்திய வரலாற்றில் மன்சூர் அலி கான் பட்டோடி மட்டுமே குறைந்த போட்டிகளில் விளையாடிய போதிலும் கேப்டனாக பொறுப்பேற்று அசத்தியதாக முன்னாள் வீரர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக சுப்மன் கில்லுக்கு மட்டுமே அந்த அரிதான வாய்ப்பு கிடைத்தள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார். அந்த வாய்ப்பில் சிறப்பாக செயல்பட வாழ்த்து தெரிவிக்கும் சஞ்சய் பங்கர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
போய் கலக்குங்க:
“இந்திய அணி மறு சீரமைக்கும் சூழலில் இருக்கிறது. அது போன்ற சூழலில் தேர்வாளர்கள் கேப்டனை நீண்ட கால கண்ணோட்டத்தில் தேர்ந்தெடுத்துள்ளார்கள். இது சுப்மன் கில்லுக்கு தொடர்ச்சியாக தன்னுடைய தோள்பட்டையை பார்க்காமல் தன்னை நிலைநிறுத்தி அசத்துவதற்கான அரிய வாய்ப்பைத் தருகிறது. இந்திய கிரிக்கெட்டில் குறைந்த அனுபவமுள்ள ஒருவருக்கு இப்படி கேப்டன்ஷிப் வழங்கப்படுவது வழக்கத்திற்கு மாறானது”
இதையும் படிங்க: ரோஹித், கோலியை அனுப்பிட்டா மிராக்கள் நடக்குமா? இந்திய அணி சாதிக்க 2 வருஷமாகும்.. கிரண் மோர் விமர்சனம்
“2000க்குப்பின் டிராவிட், கும்ப்ளே, தோனி, கோலி, ரோஹித் ஆகியோர் கேப்டனாக வருவதற்கு முன் நிறைய போட்டிகளில் விளையாடினர். டைகர் பட்டோடி மட்டுமே குறைந்த அனுபவத்தைக் கொண்டிருந்தும் கேப்டனாக பொறுப்பேற்றார். அவருக்கு அடுத்தபடியாக போட்டிகள் அடிப்படையில் கில் 2வது இளம் இந்திய கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். அவருடைய இந்த வேலையில் வெற்றிகரமாக செயல்பட வாழ்த்துக்கள்” என்று கூறினார்.



