இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியின் சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரது தலைமையில் சாய் சுதர்சன் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஜாம்பவான்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடரில் இந்தியா அடுத்தடுத்த தோல்விகளை சந்திக்க அவர்கள் முக்கிய காரணமாக அமைந்தனர். எனவே அவர்களை கழற்றி விட பிசிசிஐ முடிவெடுத்ததாக செய்திகள் வெளியாகின. அதற்கு முன்பாக அவர்களாகவே ஓய்வு பெற்றது நிறைய இந்திய ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது.
மிராக்கள் நடக்காது:
அவர்களைப் போலவே தற்போது முகமது ஷமியையும் வயது மற்றும் ஃபிட்னெஸ் ஆகியவற்றை காரணமாக சொல்லி தேர்வுக்குழு கழற்றி விட்டுள்ளது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைக்கு புதிய அணியை உருவாக்கும் நோக்கத்திலேயே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியுள்ளார். இந்நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மாவை கழற்றி விட்டால் மட்டும் இங்கிலாந்து மண்ணில் இளம் இந்திய அணியும் மிராக்கள் (அதிசய) வெற்றியை பெற்று விடாது என கிரண் மோர் தெரிவித்துள்ளார்.
மேலும் வருங்காலத்தை முன்கூட்டியே சரியாக திட்டமிடாத அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு திடீரென சீனியர்களை கழற்றி விட்டது சரியான முடிவல்ல என்றும் அவர் சாடியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவரான கிரண் மோர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இங்கிலாந்தில் விளையாடுவதால் உங்களுக்கு 3 – 4 துவக்க வீரர்கள் தேவைப்படும். இந்த சுற்றுப்பயணத்தில் நான் மிராக்களை எதிர்பார்க்கவில்லை”
கிரண் மோர் விளாசல்:
“இந்த இளம் இந்திய அணி தடுமாறும் என்று நான் நினைக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிருந்து இந்தியா நல்ல அணியாக உருவாக இன்னும் 2 வருடங்கள் தேவைப்படும். இந்த முடிவுகள் எனக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. மொத்த தேர்வுக்குழுவும் இந்த மாற்றம் வரும் என்பதை முன்னதாகவே நினைத்திருக்க வேண்டும்”
இதையும் படிங்க: ரோஹித், கோலிக்கு நியாயம்.. பும்ராவுக்கு அநியாயமா? கில் திணறுவாரு.. மூளையற்ற முடிவை சாடிய மஞ்ரேக்கர்
“அவர்கள் தற்போது திடீரென விழித்துக் கொண்டு யார் அடுத்த கேப்டனாக இருக்க வேண்டும்? என்று கேட்கிறார்கள். இந்த சூழ்நிலைக்கு நாம் ஒன்றரை வருடங்கள் முன்னதாகவே தயாராக இருந்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். ஆனால் அதை செய்யாததால் இது நமக்கு மிகப்பெரிய விழிப்பு நிலையாக அமைந்துள்ளது” என்று கூறினார்.



