
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளது. இந்த வருடம் ஆரம்பம் முதலே தடுமாற்றமாக விளையாடிய சென்னை 10 போட்டிகளில் 2 வெற்றி 8 தோல்விகளை சந்தித்துள்ளது. அதனால் புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தை பிடித்துள்ள சென்னை முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் அதிகாரப்பூர்வமாக வெளியேறியது.
அத்துடன் 2024, 2025 என வரலாற்றிலேயே முதல் முறையாக அடுத்தடுத்த ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியாமல் சிஎஸ்கே வெளியேறியுள்ளது. 5 கோப்பைகளை வென்ற சிஎஸ்கே தொடர்ச்சியாக வெற்றிகளை பெறுவதற்கு பெயர் போன அணியாகும். ஆனால் இந்த வருடம் சரியான வீரர்களை வாங்கத் தவறியதால் அந்த அணி மோசமாக செயல்பட்டு விழுந்துள்ளது.
ஒரு ஓட்டை இருந்தால் அடைக்கலாம் அணி முழுவதுமே ஓட்டையாக இருந்தால் எப்படி அடைப்பது? என்று கடந்த போட்டியில் தோனி ஆதங்கம் தெரிவித்திருந்தார். அத்துடன் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லத் தவறினால் அடுத்த வருடம் சரியான அணியை உருவாக்கி கம்பேக் கொடுப்போம் என்றும் தோனி கூறியிருந்தார். இந்நிலையில் 2026இல் சிஎஸ்கே வெற்றிப் பாதைக்கு திரும்ப ரவிசந்திரன் அஸ்வினை கழற்றி விட வேண்டும் என்று முன்னாள் வீரர் சஞ்சய் பங்கர் கூறியுள்ளார்.
ஏனெனில் 9.75 கோடி என்ற பெரிய தொகைக்கு அஸ்வின் இம்முறை 10 வருடங்கள் கழித்து சிஎஸ்கே அணிக்காக வாங்கப்பட்டார். ஆனால் அந்த வாய்ப்பில் அஸ்வின் 7 இன்னிங்ஸில் வெறும் 5 விக்கெட்டுகளை 9.29 என்ற சுமாரான சராசரியில் மட்டுமே எடுத்தார். அதிலும் தம்முடைய சொந்த ஊரான சேப்பாக்கத்தில் கூட அஸ்வின் எந்தப் போட்டியிலும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
எனவே அவரை கழற்றி விட்டால் 9.75 கோடிகளை வைத்து தற்சமயத்தில் ஃபார்மில் உள்ள வீரர்களை வாங்க முடியும் என்று சஞ்சய் பங்கர் கூறியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “சிஎஸ்கே அணி அஸ்வினை தக்க வைப்பார்களா? இல்லையா? என்பது மற்றொரு கேள்வி. ஏனெனில் அங்கே தான் அவர்களுடைய பணம் பூட்டு (லாக்) போடப்பட்டுள்ளது”
இதையும் படிங்க: ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை காணாத 2 மோசமான சாதனைகளுடன் பிளே ஆப் வாய்ப்பை இழந்த சி.எஸ்.கே – விவரம் இதோ
“அவர்கள் தங்களுடைய ஏலத்தொகையை அதிகமாக விரும்புவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்கள் இந்த சீசனில் அஸ்வினை முழுமையாக பயன்படுத்தவில்லை. எனவே அவர்கள் அவரை மீண்டும் பயன்படுத்த விரும்ப மாட்டார்கள். அஸ்வின் மற்றும் பதிரனா ஆகியோரை வைத்திருக்கலாமா? அல்லது அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை கண்டறியலாமா? என்று சிஎஸ்கே இந்நேரம் யோசிக்கத் துவங்கியிருப்பார்கள்” எனக் கூறினார்.