ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் துவங்குகிறது. அந்தத் தொடரில் தங்களுடைய சொந்த மண்ணில் பாகிஸ்தான் நடப்பு சாம்பியனாக களம் இறங்குகிறது. மறுபுறம் இந்திய அணி தங்களுடைய போட்டிகளை துபாயில் விளையாட உள்ளது. முன்னதாக 2017 சாம்பியன்ஸ் கோப்பையில் நடப்புச் சாம்பியனாக விராட் கோலி தலைமையில் களமிறங்கிய இந்தியா இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் பரிதாபமாக தோற்றது.
இங்கிலாந்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் ஃபகார் ஜமான் 114 ரன்கள் எடுத்த உதவியுடன் 339 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய இந்தியா மோசமாக விளையாடி வெறும் 158க்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்தது. விராட் கோலி, ரோஹித் சர்மா, தவான் உள்ளிட்ட டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே தங்களுடைய விக்கெட்டை பறிகொடுத்தது அந்தத் தோல்விக்கு முக்கிய காரணமானது.
சொதப்பிய இந்தியா:
இந்நிலையில் அந்தப் போட்டியில் முதல் முறையாக வெள்ளைப்பந்து ஐசிசி தொடரில் கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி தலைமையிலான தங்களது இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்திருக்க வேண்டும் என்று சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார். அதைச் செய்திருந்தால் இந்தியா தோற்றிருக்காது என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். அந்தச் சமயத்தில் இந்தியாவின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
“நாங்கள் அன்றைய நாளில் தவறு செய்தோம். இங்கிலாந்தில் டாஸ் வென்று நாங்கள் முதலில் பேட்டிங் செய்திருக்க வேண்டும். ஏனெனில் அங்கே வானிலை எப்போதும் மேகக் கூட்டத்துடன் இருக்கும். ஆனால் அன்றைய நாளில் நாள் முழுவதும் சூரிய வெளிச்சம் இருந்தது. இருப்பினும் அதை அணி நிர்வாகம் சரியாக கணிக்காமல் முடிவெடுத்தார்கள். நானும் அதிலிருந்தேன்”
பங்கர் வருத்தம்:
“கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் அனில் கும்ப்ளே, தோனி, ரோஹித் போன்ற சீனியர் வீரர்களும் இருந்தார்கள். அது தனிநபர் எடுக்கக்கூடிய முடிவாக இல்லை. கடைசியில் பாண்டியா – ஜடேஜா பேட்டிங் செய்த போதும் இலக்கு தொலைவில் இருந்தது. பாண்டியா சில பெரிய சிக்சர்களை அடித்தார். ஆனால் அதைத் தவிர்த்து நாங்கள் போட்டியில் மொத்தமாக தோற்றோம்”
இதையும் படிங்க: கிரிக்கெட்டின் ரொனால்டோ ஜஸ்ப்ரித் பும்ராவை ஃபைனல் காலையில் ஆச்சும் கொண்டு வாங்க.. ஸ்டீவ் ஹர்மிசன்
“பாண்டியா கோபப்பட்டார். ஆனால் அதை சக வீரர்களிடம் காட்டாத அவர் நான் இந்தியாவுக்காக இந்தப் போட்டியை வென்று கொடுக்கிறேன் என்ற வகையில் பேட்டிங் செய்தார். அது போன்ற சூழ்நிலையில் அந்த வீரர் தனியாக விடப்பட்டார்” என்று கூறினார். இவை அனைத்தையும் விட ஃபகார் ஜமான் ஒற்றை இலக்கத்தில் இருந்த போது பும்ரா நோ-பால் வீசியதும் அந்தத் தோல்விக்கு முக்கிய காரணமானது குறிப்பிடத்தக்கது.



