இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் மகேந்திர சிங் தோனிக்கு முன்னதாக சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமானவர். ஒரு கட்டத்தில் இந்திய அணியில் இருந்து சீனியர் வீரர்கள் ஓய்வு பெற்ற வேளையில் அடுத்த கேப்டனாக யுவராஜ் சிங் தான் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவ்வேளையில் தோனி 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையை கேப்டனாக வென்றதன் காரணமாக ஒருநாள் அணியிலும் தோனி கேப்டனாக மாறினார்.
தோனி எப்போதும் யுவ்ராஜ் சிங்கை ஒதுக்கியது கிடையாது : சந்தீப் பாட்டீல்
இப்படி தன்னை விட ஜூனியரான தோனி கேப்டன் ஆனதில் யுவராஜ் சிங்கிற்கு ஆரம்ப கட்டத்தில் உடன்பாடு இல்லை என்று கூறப்பட்டது. அதோடு இந்திய அணிக்காக யுவராஜ் சிங் தொடர்ந்து விளையாடி வந்தாலும் இறுதிவரை அவரால் கேப்டன் பதவியை பிடிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற யுவராஜ் சிங் தானும் தோனியும் நல்ல நண்பர்கள் இல்லை என்றும் ஒன்றாக அணியில் விளையாடி இருக்கிறோம் அவ்வளவுதான் என்றும் கூறியிருந்தார்.
அதோடு தனக்கு இந்திய அணியில் கேப்டன் பதவி கிடைக்காதது குறித்தும் வருத்தத்துடன் பேசியிருந்தார். அதேபோன்று தன்னுடைய மகன் யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் கரியர் முடிவுக்கு வந்ததே தோனியால் தான் என்றும் தோனி எப்போதுமே யுவராஜ் சிங்கை அணியில் இருந்து நீக்கவே விருப்பப்பட்டார் என்றும் அவரது தந்தை யோக்ராஜ் சிங் தொடர்ந்து தோனியின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவரான சந்தீப் பாட்டீல் சில தெளிவான விளக்கங்களை அளித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : யுவராஜ் சிங் இந்திய அணியில் விளையாடிய போது தோனி ஒருபோதும் அவரை வெளியேற்ற சொல்லி தேர்வுக்குழுவினரிடம் பேசியது கிடையாது. எந்த ஒரு சூழலிலும் யுவராஜ் சிங்கை அணியிலிருந்து நீக்குமாறு அவர் சொன்னதே கிடையாது.
இதையும் படிங்க : கொடுத்த வாக்கை காப்பாற்றிய இஷான் கிஷன்.. வெகுவாக பாராட்டிய கேப்டன் – விவரம் இதோ
எப்போதுமே தேர்வுக்குழுவினர் என்ன சொல்கிறார்களோ அதனை கேட்டு தனக்கு ஏற்ப அணியை தேர்ந்தெடுப்பதை பற்றி மட்டுமே தோனி உறுதியாக இருந்தார். அதை தவிர்த்து எந்த ஒரு தனிப்பட்ட வீரரின் கரியரிலும் அவர் குறுக்கிட்டது கிடையாது என அந்த சம்பவத்திற்கு சந்தீப் பாட்டீல் முற்றுப்புள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



