இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரில் 3 – 0 என்ற கணக்கில் இலங்கை ஒயிட்வாஷ் படுதோல்வியை சந்தித்தது. அந்தத் தொடரின் 3 போட்டிகளிலுமே ஆரம்பத்தில் நன்றாக பேட்டிங் செய்த இலங்கை கடைசி நேரத்தில் சொதப்பி வெற்றியை கோட்டை விட்டது. குறிப்பாக 3வது போட்டியில் கடைசி 2 ஓவரில் வெறும் 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் இலங்கை நிச்சயம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அப்போது பகுதி நேர பவுலரான ரிங்கு சிங் தனது டி20 கேரியரில் முதல் முறையாக பந்து வீசி 2 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார். அதே போல கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட போது சிராஜுக்கு பதிலாக தாமே பந்து வீசிய மற்றொரு பகுதி நேர பவுலரான கேப்டன் சூர்யகுமார் 6 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதனால் போட்டி சமனில் முடிந்தது.
ஜெயசூர்யா வருத்தம்:
அதைத் தொடர்ந்து நடந்த சூப்பர் ஓவரில் வாஷிங்டன் சுந்தர் 2 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து இலங்கையை ஆல் அவுட்டாக்கினார். இறுதியில் தீக்சனா வீசிய சூப்பர் ஓவரில் முதல் பந்திலேயே சூரியகுமார் பவுண்டரி அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அப்படி கையில் வைத்திருந்த வெற்றியை கோட்டை விட்டது இலங்கை ரசிகர்களிடம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் 3வது போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றிருக்கக் கூடாது என்று இலங்கை பயிற்சியாளர் சனாத் ஜெயசூர்யா வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் குசால் பெரேரா பேச்சை கேட்டு கடைசி நேரத்தில் பேட்டிங் வரிசையை மாற்றியது தோல்விக்கு காரணமாக அமைந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி ஜெயசூர்யா பேசியது பின்வருமாறு.
“முதலில் 3வது போட்டி சூப்பர் ஓவருக்கே சென்றிருக்கக் கூடாது. பயிற்சியாளராக நீங்கள் திட்டங்களை சொல்லத்தான் முடியும். ஆனால் களத்தில் உள்ளவர்கள் தான் அழுத்தத்தை கையாள வேண்டும். பகுதி நேர பவுலர்கள் பற்றி எங்களுக்கு தெரியும். அவர்களிடம் அந்த முக்கிய விக்கெட்டுகளை இழந்தது ஏமாற்றத்தை கொடுத்தது. குசால் பெரேரா வலது கை பேட்ஸ்மேனை அனுப்புமாறு சைகை செய்தார்”
இதையும் படிங்க: ஆசையா இருந்தாலும் வரமாட்டேன்.. ரீசெட் பண்ணப் போறேன்.. ரசிகர்கள் புதிய சகாப்தத்துக்கு தயாராகுங்க.. ரோஹித் பேட்டி
“அவருடைய எண்ணம் சரியாகவே இருந்தது. நாங்களும் பேட்டிங் வரிசையை சுழற்றுவதற்கு தயாராகவே இருந்தோம். ஆனால் அவரைப் போன்ற செட்டிலான பேட்ஸ்மேன் மெசேஜ் கொடுக்கும் போது அதை நீங்கள் கேட்டாக வேண்டும். இருப்பினும் அப்போட்டியை குஷால் பெரேரா ஃபினிஷிங் செய்திருந்தால் நான் மகிழ்ச்சியாக இருந்திருப்பேன். ஆனால் தோல்வியை சந்தித்ததால் நாங்கள் அதற்கான விமர்சனங்களை ஏற்றுக் கொள்கிறோம்” என்று கூறினார்.



